Virat Kohli: இருக்கு.. சம்பவம் இருக்கு.. புது சகாப்தம் படைப்பாரா விராட் கோலி?
Virat Kohli: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 17 ரன்கள் எடுத்தால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைப்பார்.

Virat Kohli: ஐபிஎல் தொடரில் இன்று வான்கடே மைதானத்தில் ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர் தோல்விகளால் துவண்டு வரும் மும்பை அணியும், மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பத் துடிக்கும் பெங்களூர் அணியும் மோதுவதால் இந்த போட்டி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
13 ஆயிரம் ரன்கள்:
ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமாகிய விராட் கோலி இந்த போட்டியில் புதிய வரலாறு படைப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது, விராட் கோலி இன்றைய போட்டியில் 13 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட் போட்டியில் 13 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற வரலாற்றை படைப்பார்.
விராட் கோலி கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி முதன்முதலில் டெல்லி அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரை 402 டி20 ஆட்டங்களில் விராட் கோலி ஆடி 12 ஆயிரத்து 983 ரன்களை எடுத்துள்ளார். இந்திய அணிக்காக, ஐபிஎல் தொடரிலும், உள்நாட்டு டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடியுள்ளார்.
புது வரலாறு படைப்பாரா?
இன்றைய போட்டியில் விராட் கோலி புது வரலாறு படைப்பாரா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. விராட் கோலி கடந்த 2008ம் ஆண்டு முதல் ஆர்சிபி அணிக்காக ஆடி வருகிறார். ஆர்சிபி அணிக்காக ஐபிஎல் தொடரில் 255 போட்டிகளில் ஆடி 8 ஆயிரத்து 101 ரன்களை விராட் கோலி எடுத்துள்ளார். இதுதவிர சிஎல்டி20 தொடரில் 15 போட்டிகளில் ஆடி 424 ரன்களையும் எடுத்துள்ளார். இந்திய அணிக்காக 125 டி20 போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 188 ரன்களை எடுத்துள்ளார். டெல்லி அணிக்காக 7 டி20 போட்டிகளில் ஆடி 270 ரன்களையும் எடுத்துள்ளார்.
இன்றைய போட்டியில் விராட் கோலி 17 ரன்களை எட்டி டி20 கிரிக்கெட் வரலாற்றில் 13 ஆயிரம் ரன்களை எடுத்தால் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டி20 போட்டிகளில் 13 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற வரலாற்றை படைப்பார். மேலும், சர்வதேச அரங்கில் 13 ஆயிரம் ரன்களை கடந்த 5வது வீரர் என்ற சாதனையையும் படைப்பார்.
சர்வதேச அரங்கில் எப்படி?
சர்வதேச அரங்கில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெயில் தன்வசம் வைத்துள்ளார். அவர் 14 ஆயிரத்து 562 ரன்கள் எடுத்துள்ளார். இரண்டாவது இடத்தில் இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் உள்ளார். 3வது இடத்தில் பாகிஸ்தானின் சோயிப் மாலிக் உள்ளார். 4வது இடத்தில் வெஸ்ட் இண்டீசில் பொல்லார்ட் உள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் போட்டியில் மட்டும் அபாரமாக ஆடிய விராட் கோலி அடுத்த 2 போட்டிகளில் பெரியளவு ஆடவில்லை. இதனால், இ்ன்றைய போட்டியில் அவர் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். பும்ரா, பாண்ட்யா, போல்ட் போன்ற வலுவான பந்துவீச்சாளர்களை கொண்ட மும்பை அணிக்கு எதிராக ஆர்சிபி வெற்றி பெற விராட் கோலி போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ஆட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
மற்றொரு சாதனை?
விராட் கோலி இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்க எதிராக 33 போட்டிகளில் ஆடி 855 ரன்களை எடுத்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் 96 ரன்களை எடுத்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைப்பார். இந்த சாதனையை தற்போது டெல்லி அணி வீரர் கே.எல்.ராகுல் வைத்துள்ளார். அவர் டெல்லி அணிக்கு எதிராக 18 போட்டிகளில் 950 ரன்களை விளாசியுள்ளார்.




















