(Source: Poll of Polls)
IPL 2025: சென்னைக்கு இனி சேப்பாக்கத்தில் மேட்ச் இல்லை.. சோகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் சென்னை அணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெறுவதாக இருந்த போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

18வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போர் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் ஐபிஎல் தொடர் மீண்டும் 17ம் தேதி தொடங்குவதாக பிசிசிஐ நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மீண்டும் தொடங்கும் ஐபிஎல்:
வரும் 17ம் தேதி தொடங்கும் இந்த போட்டிகள் வரும் ஜுன் 3ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரின் எஞ்சிய லீக் போட்டிகள் பெங்களூர், ஜெய்ப்பூர், டெல்லி, லக்னோ, மும்பை, அகமதாபாத்தில் நடக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் பதற்றம் காரணமாக எல்லையோர மாநிலங்களில் நடைபெற இருந்த போட்டிகள் இடம் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சென்னை சூப்பர்கிங்ஸ் அணி சென்னையில் ஆடுவதாக குறிப்பிடப்பட்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி சென்னையில் இருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னையில் போட்டி இல்லை:
சேப்பாக்கம் மைதானத்தில் திட்டமிடப்பட்டிருந்த இந்த போட்டி டெல்லிக்கு மாற்றப்பட்டிருப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரைப் பொறுத்தவரை ஏற்கனவே சென்னை சூப்பர்கிங்ஸ் அணி தொடரை விட்டு வெளியேறிய நிலையில் சென்னை அணி தற்போதுதான் ஃபார்ம்க்கு வந்துள்ளது.
இளம் வீரர்களை கொண்ட சென்னை அணியின் ஆட்டத்தை ஒரு முறை சென்னை மைதானத்தில் காண வேண்டும் என்று ஆசைப்பட்ட சிஎஸ்கே ரசிகர்களின் ஆசை இனி அடுத்த சீசனில்தான் நிறைவேற உள்ளது.
ப்ளே ஆஃப் சென்னையிலா?
அதேசமயம் குவாலிஃபயர், எலிமினேட்டர் மற்றும் இறுதிப்போட்டி நடக்கும் இடங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால், அதற்கான போட்டிகளில் ஏதாவது போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சென்னை அணியின் அடையாளமாக திகழும் எம்எஸ் தோனி அடுத்த சீசன் ஆடுவாரா? என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், அவரை இந்த தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் காண வேண்டும் என்ற சென்னை ரசிகர்களின் ஆசை இந்த சீசனில் நிறைவேறவில்லை.
சென்னை அணிக்கு இந்த தொடரில் இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளது. சென்னை அணி 20ம் தேதி டெல்லியில் ராஜஸ்தான் அணியையும், தனது கடைசி போட்டியில் 25ம் தேதி அகமதாபாத்தில் குஜராத் அணியையும் சந்திக்கிறது. தோனி தனது கடைசி போட்டி சென்னையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நிலையில், அவர் அடுத்த சீசனில் ஆடுவார் என்றே பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.




















