Virat Kohli: குட்டி கோலி டூ மெகா கோலி..! 18 வருடங்கள், அதே நாளில் அதே சம்பவம் - பஞ்சாப் போட்டியில் சுவாரஸ்யம்
Virat Kohli: விராட் கோலி 18 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியில் நிகழ்த்தியதை நேற்று மீண்டும் செய்துள்ளார்.

Virat Kohli: பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
ஆர்சிபி ஹாட்ரிக் தோல்வி:
சின்னசுவாமி மைதானத்தில் கொட்டிய மழை காரணமாக, பெங்களுரு மற்றும் பஞ்சாப் இடையேயான போட்டி 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் வெறும் 95 ரன்களை மட்டுமே சேர்த்தது. எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணி, நேஹல் வதேராவின் அதிரடியால் 12.1 ஓவரிலேயே இலக்கை எட்டி அசத்தியது. இதனால் 5 வெற்றிகளுடன் அந்த அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. அதேநேரம், சொந்த மைதானத்தில் நடப்பாண்டில் விளையாடிய மூன்றாவது போட்டியிலும், பெங்களூரு அணி தோல்வியை பதிவு செய்துள்ளது. வெளியூர் மைதானங்கள் விளையாடிய 4 போட்டிகளிலும் வென்ற ஆர்சிபி, உள்ளூரில் ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.
Virat Kohli#RCBvsPBKS #PBKSvsRCB #RCBvPBKS #PBKSvRCB pic.twitter.com/4peoBC9Dis
— IW247 (@iw247official) April 18, 2025
கோலி செய்த சம்பவம்:
ஏப்ரல் 18ம் தேதியான நேற்று தான், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் வரலாற்றின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும்பெங்களூரு அணிகள் மோதின. அதில் ஆர்சிபி அணிக்காக இளம் வீரராக அறிமுகமானவர் தான், இன்றைய கிரிக்கெட்டின் மன்னர் விராட் கோலி. அந்த போட்டியில் 5 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி, வெறும் ஒரு ரன்னை மட்டுமே சேர்த்து டிண்டா ஓவரில் போல்டாகினார். இந்நிலையில் அதே நாளில் அதே மைதானத்தில் நடைபெற்ற, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 3 பந்துகளை எதிர்கொண்ட கோலி வெறும் ஒரு ரன்னை மட்டுமே சேர்த்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதுதொடர்பான புகைப்படங்களை குறிப்பிட்டு, என்றும் மாறாத கோலி என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 2008ம் ஆண்டு இதேநாளில் நடைபெற்ற போட்டியிலும் பெங்களூரு தோல்வியுற்றது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் பெங்களூரு தோல்வியுற்றது.
வரலாற்றிலேயே ஒரே வீரர்:
ஐபிஎல் வரலாற்றிலேயே அறிமுகமானது முதல் ஒரே அணிக்காக விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமை கோலியை மட்டுமே சேரும். 2008ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் கேப்டனாக உலகக் கோப்பையை வென்றதை தொடர்ந்து, கவனம் ஈர்த்த கோலியை பெங்களூரு அணி ஒப்பந்தம் செய்தது. அதுமுதல் தற்போது வரை 18 ஆண்டுகளாக பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். அதன் பிறகு, இந்திய அணியின் கேப்டன், ரன்மெஷின், பல்வேறு பிரிவுகளில் ஏராளமான சாதனைகள், சர்வதேச கிரிக்கெட்டின் அடையாளம் என கோலி அசுர வளர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த என்ற பெருமையும்கோலிக்கு உண்டு. ஐசிசியின் ஒருநாள் கோப்பை, டி20 கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி என பல்வேறு கோப்பைகளை கோலி வென்றுள்ளார். ஆனால், 18 ஆண்டுகளாகியும் ஐபிஎல் தொடரில் மட்டும் இதுவரை ஒரு கோப்பையை கூட கோலி வெல்லவில்லை.




















