IPL 2025 RCB vs MI: கொளுத்திய கோலி.. படிதார் ருத்ரதாண்டவம்.. ஜிதேஷ் காட்டடி! 222 ரன்களை எட்டுமா மும்பை?
IPL 2025 RCB vs MI: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கோலி, ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, படிக்கல் அதிரடியால் 222 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். வான்கடே மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியில் ஆட்டத்தின் முதல் பந்திலே பவுண்டரி அடித்த பில் சால்ட் 4 ரன்களில் போல்ட் பந்தில் போல்டானார்.
கோலி - படிக்கல் மிரட்டல்:
இதையடுத்து, ஜோடி சேர்ந்த விராட் கோலி - தேவ்தத் படிக்கல் ஜோடி அபாரமாக ஆடியது. பவர்ப்ளேவில் அதிரடியாக ஆடுவது சிறப்பானது என்பதை உணர்ந்த இந்த ஜோடி பவுண்டரி, சிக்ஸர் என விளாசியது. குறிப்பாக, போல்ட், தீபக் சாஹர் ஆகியோரது பந்துவீச்சில் விராட் கோலி அதிரடி காட்டினார். இதனால், ஓவருக்கு 10 ரன்கள் வீதத்தில் ஆர்சிபி ரன்ரேட் சென்று கொண்டிருந்தது. விராட் கோலி அதிரடி காட்ட அவருக்கு மறுமுனையில் படிக்கல்லும் ஒத்துழைப்பு தந்து அதிரடி காட்டினார்.
கோலி அதிரடி அரைசதம்:
சிறப்பாக அதிரடி காட்டி கொண்டிருந்த படிக்கல்லை விக்னேஷ் புத்தூர் பெவிலியனுக்கு அனுப்பினார். அவரது பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்த படிக்கல் வில் ஜேக்சிடம் கொடுத்து அவுட்டானார். அவர் 22 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 37 ரன்களில் அவுட்டானார். இதன்பின்னர், கேப்டன் ரஜத் படிதார் களமிறங்கினார். இந்த ஜோடியும் அதிரடியைத் தொடர்ந்த நிலையில், விராட் கோலி அதிரடி அரைசதம் கடந்தார்.
அதிரடி காட்டிக் கொண்டிருந்த விராட் கோலி பாண்ட்யா பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து அவுட்டானார். அவர் 42 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 67 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இதையடுத்து, வந்த லிவிங்ஸ்டன் டக் அவுட்டானார். 14.3 ஓவர்களில் 144 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
படிதார், ஜிதேஷ் மிரட்டல்:
இதன்பின்னர், ரஜத் படிதார் - ஜிதேஷ் சர்மா ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி மும்பை பந்துவீச்சை விளாசித் தள்ளியது. போல்ட், தீபக் சாஹர், பும்ரா, விக்னேஷ் புத்தூர் என யார் வீசினாலும் அதிரடி காட்டினர். இதனால் 150 ரன்களை கடந்து ஆர்சிபி ரன்கள் வெற்றிகரமாக சென்றது. தொடர்ந்து அரதிடி காட்டிய ரஜத் படிதார் 25 பந்துகளில் அரைதசம் கடந்தார்.
மறுமுனையில் ஜிதேஷ் சர்மா தொடர்ந்து மிரட்டலாக பேட் செய்தார். 200 ரன்களை ஆர்சிபி அணி கடந்த நிலையில் கேப்டன் படிதார் போல்ட் பந்தில் அவுட்டானார். அவர் பின்னோக்கி சிக்ஸர் அடிக்க முயற்சித்த பந்தை விக்கெட் கீப்பர் ரிக்கெல்டன் ஓடிச்சென்று கேட்ச் பிடித்தார். இதனால், படிதார் 32 பந்துகளில் 5 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 64 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசி ஓவரில் ஜிதேஷ் சர்மா சிக்ஸர் விளாச ஆர்சிபி அணி 20 ஓவர்களின் முடிவில் 221 ரன்களை எடுத்தது.
222 ரன்கள் டார்கெட்:
ஜிதேஷ் சர்மா 19 பந்துகளில் 2 பவுண்டரி 4 சிக்ஸருடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டிம் டேவிட் 1 ரன்னுடன் களத்தில் இருந்தார். 222 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது. போல்ட் 4 ஓவர்களில் 57 ரன்களை வாரி வழங்கினார்.




















