IPL 2025 PBKS vs KKR: பிரித்தெடுத்த பிரியன்ஷ் - பிரப்சிம்ரன்! 202 ரன்களை எட்டுமா கொல்கத்தா?
IPL 2025 KKR vs PBKS: கொல்கத்தா அணிக்கு பஞ்சாப் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் இன்று நடந்த போட்டியில் ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் கொல்கத்தா அணியும், புள்ளிப்பட்டியலில் முன்னேற பஞ்சாப் கிங்ஸ் அணியும் வெற்றிக்காக களமிறங்கின.
பிரியன்ஷ் - பிரப்சிம்ரன் அபாரம்:
டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய பஞ்சாப் அணிக்காக ப்ரியன்ஷ் ஆர்யா - பிரப்சிம்ரன் ஜோடி பட்டாசாய் வெடித்தனர். பவுண்டரி, சிக்ஸராக விளாசினர். 10 ரன்களுக்கு மேல் பஞ்சாபின் ரன்ரேட் சென்று கொண்டிருந்தது. வைபவ் அரோரா, சேத்தன் சக்காரியா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ரஸல் என யார் வீசினானாலும் அதிரடி காட்டினர்.
அபாரமாக ஆடிய பிரியன்ஷ் ஆர்யா அரைசதம் கடந்தார். இந்த ஜோடியின் ஆட்டத்தால் பந்து மேலே பறந்து கொண்டே இருந்தது. சிறப்பாக ஆடிய பிரியன்ஷ் ஆர்யா ரஸல் பந்தில் அவுட்டானார். அவர் 35 பந்துகளில் 8 பவுண்டரி 4 சிக்ஸருடன் 69 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதையடுத்து, வந்த ஸ்ரேயாஸ் ஐயர் நிதானம் காட்ட பிரப்சிம்ரன் ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் அரைசதம் கடந்து சதத்தை நோக்கி முன்னேறினார். அப்போது அவர் வைபவ் அரோரா பந்தில் அவுட்டானார்.
கட்டுக்குள் வந்த பஞ்சாப்:
அவர் 49 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் 83 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின்பு பஞ்சாப் ரன்ரேட் சற்று சரிந்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் - மேக்ஸ்வேல் ஜோடி மிகவும் நிதானமாக ஆடினார். ஆனால், மேக்ஸ்வெல் வருண் சக்கரவர்த்தி சுழலில் 7 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த ஜான்சென் 3 ரன்னில் அவுட்டானார்.
202 ரன்கள் டார்கெட்:
ஸ்ரேயாஸ் ஐயர் - இங்கிலிஷ் ஜோடி கடைசி ஓவரில் அதிரடி காட்ட முயற்சித்தனர். ஆனால், ரஸல் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். அந்த ஓவரில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே அவர் விட்டுக்கொடுத்தார். கடைசியில் 20 ஓவர்களில் பஞ்சாப் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்ரேயாஸ் 16 பந்தில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 25 ரன்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலிஷ் 6 பந்தில் 2 பவுண்டரியுடன் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
240 ரன்கள் வரை செல்ல வேண்டிய ரன்களை கடைசியில் கொல்கத்தா தனது சிறப்பான பந்துவீச்சால் கட்டுப்படுத்தியது.




















