IPL PBKS vs DC: பஞ்சரான பஞ்சர்.. வெற்றியுடன் வெளியேறிய டெல்லி! ரிஸ்வி - கருண் நாயர் சம்பவம்!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி வெற்றியுடன் இந்த தொடரை விட்டு வெளியேறியது.

ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ப்ளே ஆஃப்க்கு அணிகள் தேர்வாகியுள்ள நிலையில் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களுக்குள் பிடிக்க ஒவ்வொரு அணியும் மல்லுகட்டி வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய இந்த ஐபிஎல் தொடரில் தோற்றுக் கொண்டிருந்த அணிகள் ப்ளே ஆஃப் சென்ற அணிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தருகின்றன.
207 ரன்கள் டார்கெட்:
இந்த சூழலில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களுக்குள் செல்வதற்கு பஞ்சாப் இன்று டெல்லியுடன் மோதியது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணிக்கு இங்கிலிஷ், ஸ்ரேயாஸ், ஸ்டோய்னிஸ் அதிரடி காட்ட 207 ரன்களை டெல்லிக்கு இலக்காக நிர்ணயித்தது.
டுப்ளிசிஸ் - ராகுல் அதிரடி:
டெல்லி அணிக்கு இது கடைசி ஆட்டம் என்பதால் வெற்றியுடன் முடிக்க வேண்டும் என்பதற்காக கே.எல்.ராகுல் - டுப்ளிசிஸ் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் இணைந்து அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். ஓவருக்கு 5 ரன்கள் வீதம் இவர்கள் ஆடிக்கொண்டிருந்த நிலையில் ராகுல் 21 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 35 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த அடுத்த ஓவரிலே ஃபாப் டுப்ளிசிஸ் அவுட்டானார். அவர் 15 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 23 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கருண் - ரிஸ்வி அதிரடி:
அதன்பின்பு, கருண் நாயர் -அடல் ஜோடி சேர்ந்தனர். கருண் நாயர் சிக்ஸருடனே ஆட்டத்தை தொடங்கிய நிலையில், பவுண்டரிகளாக விளாசி அதிரடி காட்டினார். அவருக்கு அடல் சிக்ஸர் விளாசி ஒத்துழைப்பு அளிக்க ஓவருக்கு 10 ரன்கள் வீதம் டெல்லி அணி பயணித்தது. அபாரமாக ஆடிய அடல் 16 பந்துகளில் 2 சிக்ஸருடன் 22 ரன்கள் எடுத்து அவுட்டாக அடுத்து கருண் நாயர் - சமீர் ரிஸ்வி ஜோடி சேர்ந்தனர்.
பந்துகளை காட்டிலும் ரன்கள் இரண்டு மடங்கு இருந்ததால் இருவரும் அடித்தே ஆடினார்கள். கடைசி 36 பந்துகளில் 61 ரன்கள் டெல்லி வெற்றிக்கு தேவைப்பட்டது. கருண் நாயர் - ரிஸ்வி ஜோடி 23 பந்துகளில் 50 ரன்களை கடந்தது. அபாரமாக ஆடிய கருண் நாயர் ப்ரார் சுழலில் போல்டானார். அவர் 27 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கடைசி 30 பந்துகளில் டெல்லிக்கு 52 ரன்கள் தேவைப்பட்டது. ரிஸ்வி, ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் இருந்ததால் அவர்களது வெற்றி வாய்ப்பு பிரகாசமாகவே இருந்தது.
டெல்லி வெற்றி:
கடசைி 6 பந்துகளில் டெல்லி வெற்றிக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஸ்டோய்னிஸ் வீசினார். அவர் முதல் பந்தை ஒயிடாக வீச 6 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. ரிஸ்வி முதல் பந்தில் ஒரு ரன் எடுக்க, 2வது பந்தில் ஸ்டப்ஸ் 1 ரன் எடுக்க 4 பந்துகளுக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. 3வது பந்தில் ரிஸ்வி அபாரமான சிக்ஸர் அடித்து டெல்லியை வெற்றி பெற வைத்தார்.
டெல்லி அணி இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் டெல்லி அணி வெற்றியுடன் இந்த தொடரை விட்டு வெளியேறியுள்ளது.




















