IPL 2025 Playoffs MI: மும்பைக்கு டாப் 2 வாய்ப்பு இருக்கா? பல்தான்ஸ் செய்ய வேண்டியது என்ன? பிளே-ஆஃப் கணக்குகள்
IPL 2025 Playoffs MI: ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் லீக் சுற்றின் முடிவில், முதல் இரண்டு இடங்களை பிடிக்க மும்பை அணிக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

IPL 2025 Playoffs MI: ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் லீக் சுற்றின் முடிவில், முதல் இரண்டு இடங்களை பிடிக்க மும்பை அணிக்கு 6.3 சதவிகிதம் மட்டுமே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பிளே-ஆஃப் சுற்றில் நுழைந்த 4 அணிகள்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று முடிவடைய இன்னும் 8 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. நடப்பு சாம்பியன் கொல்கத்தா, சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள் பிளே-ஆஃப் வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டன. குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மட்டுமே பிளே-ஆஃப் சுற்றிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த நான்கு அணிகளில் மும்பை ஐந்து முறையும், குஜராத் ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளது. ஆனால், பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும், முதல் இரண்டு இடங்களை பிடிக்கப் போகும் அணிகள் எவை என்பது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல் இரண்டு இடங்களுக்கான முக்கியத்துவம்:
ஐபிஎல் தொடரில் லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு, இறுதிப்போட்டிக்கான தகுதிபோட்டியில் விளையாட இரண்டு முறை வாய்ப்பு கிடைக்கும். அதன்படி, முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் முதல் தகுதிச்சுற்று போட்டியில் மோதி, வெற்றி பெறும் அணி நேரடியாக தகுதிப்போட்டிக்கு முன்னேறும். அதேநேரம், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்த அணிகள் மோதும் நாக்-அவுட் போட்டியில் வெற்றி பெறும் அணி, முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வியுற்ற அணியுடன் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் விளையாடும். இதன் வெற்றியாளர் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவர். இதன் காரணமாகவே, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டுகின்றன.
மும்பை அணி டாப்-2ல் வருமா?
நடப்பு தொடரில் இரண்டாவது முறையாக டெல்லி அணியை வீழ்த்தியன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 11வது முறையாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதனால், மும்பை அணி 6வது முறையாக கோப்பையை அடித்து சாதனை படைக்குமா? என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அதேநேரம், லீக் சுற்றின் முடிவில் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்குமா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளது. மீதமுள்ள 7 போட்டிகளின் முடிவுகள் தான், புள்ளிப்பட்டியலில் எந்த அணிக்கு எந்த இடம் என்பதை தீர்மானிக்க உள்ளது. ஒவ்வொரு அணியின் போட்டியின் முடிவும், மற்ற அணிகளின் இடத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நான்கு அணிகளுக்கான வாய்ப்புகள் என்ன?
1. குஜராத் டைட்டன்ஸ்
12 போட்டிகளில் விளையாடி 9 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணி, மீதமுள்ள இரண்டு லீக் போட்டிகளில் லக்னோ மற்றும் சென்னை அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் ஏதேனும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே, குஜராத் அணியின் முதல் இரண்டு இடம் என்ற இலக்கு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். இருப்பினும், இரண்டு போட்டிகளையும் வெல்வதே அந்த அணிக்கு நன்மை பயக்கும்.
2. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஐதராபாத் மற்றும் லக்னோ அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த இரண்டிலும் வெற்றி பெற்றால் 21 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கக் கூடும். 17 புள்ளிகளை பெற்றுள்ள பஞ்சாபை காட்டிலும், ரன்ரேட் வலுவாக இருப்பது பெங்களூரு அணிக்கு சாதகமாக உள்ளது.
3. பஞ்சாப் கிங்ஸ்
பஞ்சாப் கிங்ஸ் அணியும் 12 போட்டிகளில் விளையாடி 17 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் டெல்லி மற்றும் மும்பை அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த இரண்டிலும் வெற்றி பெற்றால் 21 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்க கூடும். அதேநேரம், பெங்களூரு அணியும் தற்போது சிறந்த ரன் ரேட்டுடன் 17 புள்ளிகளை பெற்று இருப்பதால், அந்த அணி ஏதேனும் ஒரு போட்டியில் தோல்விறுவது பஞ்சாப் அணிக்கு அவசியம். அல்லது தங்களுக்கான இரண்டு லீக் போட்டிகளிலும் பஞ்சாப் அபார வெற்றியை குவித்து ரன்ரேட்டை வலுப்படுத்த வேண்டும்.
4. மும்பை இந்தியன்ஸ்:
நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் கடைசி அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள ஒரே போட்டியில் வரும் 26ம் தேதி பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் வெற்றி பெற்றால் அந்த அணியின் புள்ளிகள் 18 ஆக உயரும். அதனுடன் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற, பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் தங்களது இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியுற வேண்டும். அதேநேரம், நான்கு அணிகளிலும் சிறந்த ரன் ரேட்டை கொண்டு இருப்பதால், மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் குஜராத் தோல்வியுற, தனது கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தினால் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கே எளிதாக முன்னேறக்கூடும். இருப்பினும் அபாரமான ஃபார்மில் உள்ள குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் தோல்வியுறுவது என்பது மிகவும் சிரமமே. எனவே, புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு என்பது மும்பைக்கு சுமார் 10 முதல் 15 சதவிகித வாய்ப்பு மட்டுமே உள்ளது.




















