IPL 2025 KKR vs RR: இறுதிவரை விறுவிறு.. போராடிய பராக், ஷுபம் துபே! 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி
IPL 2025 KKR vs RR: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

கொல்கத்தா - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய 53வது போட்டி இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் கட்டாய வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் கொல்கத்தா அணி களமிறங்கியது.
207 ரன்கள் டார்கெட்:
ரஸல் காட்டிய அதிரடியால் கொல்கத்தா அணி 206 ரன்களை எட்டியது. இதையடுத்து, 207 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு சூர்யவன்ஷி 4 ரன்களில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அறிமுக வீரராக களமிறங்கிய குணால் சிங் ரத்தோர் டக் அவுட்டானார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் ஜெய்ஸ்வால் - கேப்டன் ரியான் பராக் ஜோடி சேர்ந்தனர்.
சுழல் தாக்குதல்:
இந்த ஜோடி அதிரடியாக ஆடியது. ஜெய்ஸ்வால் பவுண்டரிகளாக விளாச கேப்டன் ரியான் பராக் சிக்ஸராக விளாசினார். சிறப்பாக ஆடிய இந்த ஜோடியை மொயின் அலி பிரித்தார். அவரது சுழலில் சிக்கிய ஜெய்ஸ்வால் அவுட்டானார். அவர் 21 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 34 ரன்களில் அவுட்டானார். அதன்பின்பு ராஜஸ்தான் அணிக்கு வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தந்தார்.
வருண் சக்கரவர்த்தி வீசிய 8வது ஓவரில் அதிரடி வீரர் துருவ் ஜோரல், ஹசரங்கா இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் போல்டானார்கள். இதனால், 71 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணிக்காக கேப்டன் ரியான் பராக் சிக்ஸராக விளாசினார்.
பராக் சிக்ஸர் மழை:
ரியான் பராக் சிக்ஸர்களாக விளாசி ராஜஸ்தான் ரன்வேகத்தை உயர்த்தினார். அவரது அதிரடியால் ஓவருக்கு 10 ரன்கள் வந்து கொண்டிருந்தது. அவருக்கு ஹெட்மயர் ஒத்துழைப்பு தந்தார். இந்த ஜோடியைப் பிரிக்க வைபவ் அரோரா, மொயின் அலி, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் ஆகியோரை கேப்டன் ரஹானே பயன்படுத்தினார். ஆனாலும், இந்த ஜோடி தனது அதிரடியைத் தொடர்ந்தது.
இறுதியில் இந்த ஜோடியை ஹர்ஷித் ராணா பிரித்தார். அவரது பந்துவீச்சில் ஹெட்மயர் 23 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசி 20 பந்துகளில் ராஜஸ்தான் வெற்றிக்கு 40 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ரியான் பராக் அளித்த கடினமான கேட்ச் வாய்ப்பை ரிங்கு சிங் தவறவிட்டார்.
சதத்தை தவறவிட்ட பராக்:
அதன்பின்பு, 18வது ஓவரில் கிடைத்த எளிதான ரன் அவுட் வாய்ப்பையும் விக்கெட் கீப்பர் குர்பாஸ் தவறவிட்டார். ஆனால், அடுத்த பந்திலே ரியான் பராக் அவுட்டானார். அவர் 45 பந்துகளில் 6 பவுண்டரி 8 சிக்ஸருடன் 95 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால், ராஜஸ்தானின் வெற்றி வாய்ப்பு கடினமானது.
கடைசி ஓவர் பரபரப்பு:
கடைசி 6 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்டது. வைபவ் அரோரா வீசிய முதல் பந்தில் ஆர்ச்சர் பவுண்டரிக்கு விளாசிய பந்தை ரிங்குசிங் அபாரமாக தடுத்ததால் 2 ரன் மட்டுமே கிடைத்தது, அடுத்த பந்தில் 1 ரன் ஆர்ச்சர் எடுக்க 4 பந்துகளுக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஷுபம் துபே சிக்ஸர் விளாச கடைசி 3 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது.
இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த பந்திலும் ஷுபம் துபே பவுண்டரி விளாச 2 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த பந்திலும் ஷுபம் துபே சிக்ஸர் விளாச பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், ஒரு பந்தில் 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது வைபவ் அரோரா வீசிய கடைசி பந்து யார்க்கராக மாற அது ஷுபம் துபே பேட்டில் சரியாக படாததால் ஷுபம் துபே - ஆர்ச்சர் ஜோடி 2 ரன்கள் எடுக்க முயற்சித்தது. ஆனால், ரிங்கு சிங் அதற்குள் பந்தை எடுத்து விளாச வைபவ் அரோரா ஆர்ச்சரை ரன் அவுட் செய்தார்.
இதனால் விறுவிறுப்பான இந்த போட்டியில் கொல்கத்தா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதிவரை பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் ராஜஸ்தான் தோற்றது. இந்த வெற்றி மூலம் 11 புள்ளிகள் பெற்று கொல்கத்தா 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் கொல்கத்தா வெற்றி பெற்றால் அவர்களது ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம் ஆகும்.



















