IPL 2025 KKR vs GT: கம்பேக் தருமா கொல்கத்தா? எட்ட முடியா இலக்கை நிர்ணயிக்குமா கில் படை?
IPL 2025 KKR vs GT: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுகிறது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று நடக்கும் போட்டியில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
குஜராத் - கொல்கத்தா
புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணியும், புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் இன்றைய போட்டியில் தங்களது அடுத்த வெற்றிக்காக மோதுகின்றன. குஜராத்தை காட்டிலும் கொல்கத்தாவிற்கு இன்றைய போட்டியின் வெற்றி மிக மிக முக்கியம் ஆகும்.
பேட்டிங் பலம்:
குஜராத் அணி வலுவான பேட்டிங்கை கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. இளம் வீரர்களை கொண்ட குஜராத் அணியில் கேப்டன் கில், சுதர்சன், அனுபவ வீரர் பட்லர், ரூதர்ஃபோர்டு, ஷாருக்கான் பேட்டிங்கிற்கு பக்கபலமாக உள்ளனர். பின்வரிசையில் ராகுல் திவேதியாக ஆக்ரோஷமாக ஆடினால் ஆட்டம் மாறும்.
இவர்கள் தொடர்ந்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்துவது போல இன்றைய போட்டியிலும் வெளிப்படுத்தினால் கண்டிப்பாக கொல்கத்தாவிற்கு நெருக்கடி ஏற்படும்.
ஃபார்முக்கு வருமா நடப்பு சாம்பியன்?
அதேபோல, கொல்கத்தா அணியில் தொடர்ந்து தடுமாறி வரும் டி காக் இன்று ஃபார்முக்கு வரவேண்டியது அவசியம் ஆகும். சுனில் நரைன் அவருக்கு ஒத்துழைப்பு தந்தால் கொல்கத்தாவின் தொடக்கம் சூடுபிடிக்கும். அதேபோல, பஞ்சாப்பிற்கு எதிராக சரிந்த வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங்,ராமன்தீப் இன்று அதிரடி காட்ட வேண்டியது அவசியம் ஆகும். கேப்டன் ரகானேவும் - ரகுவன்ஷியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஆட்டம் முழுவதும் கொல்கத்தா வசப்படும்.
சுழல் மாயாஜாலம் தொடருமா?
குஜராத் அணியுடன் ஒப்பிடும்போது கொல்கத்தா சுழலில் பலமாக உள்ளது. வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் முக்கிய பலமாக உள்ளனர். குஜராத் அணியில் உலகத்தரம் வாய்ந்த ரஷீத்கான் உள்ளார். அவர் தனது மாயாஜாலத்தை காட்டினால் எதிரணிக்கு நிச்சயம் சிரமமே ஆகும். அவருடன் சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். வேகத்தில் முகமது சிராஜ், இஷாந்த் சர்மா, பிரசித் கிருஷ்ணா உள்ளனர். கொல்கத்தா அணியில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா உள்ளனர்.




















