IPL 2025 KKR vs DC: சல்லி சல்லியாய் நொறுங்கிய டெல்லி! நரைன் மாயாஜாலத்தால் கொல்கத்தா அபார வெற்றி!
IPL 2025 KKR vs DC: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

IPL 2025 KKR vs DC: ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. டெல்லியில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி முதலில் பேட் செய்தது. குர்பாஸ், சுனில் நரைன், ரகானே, ரகுவன்ஷி, ரிங்குசிங் பேட்டிங்கால் 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
டுப்ளிசிஸ் - அக்ஷர் அதிரடி:
இதையடுத்து, இமாலய இலக்குடன் களமிறங்கிய அபிஷேக் போரல் - டுப்ளிசிஸ் ஜோடிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அபிஷேக் போரல் 4 ரன்னில் அவுட்டாக அடுத்து வந்த கருண் நாயர் 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
அவர் அவுட்டான பிறகு வந்த கே.எல்.ராகுலும் 7 ரன்னில் ரன் அவுட்டாக, டுப்ளிசிஸ் - அக்ஷர் படேல் ஜோடி சேர்ந்தனர். இலக்கு பெரியதாக இருந்த நிலையில் டுப்ளிசிஸ் - அக்ஷர் படேல் அடித்து ஆடினர். குறிப்பாக, கேப்டன் அக்ஷர் படேல் சிக்ஸரும் பவுண்டரியும் விளாசி அணி இலக்கை அடைய வழிவகுத்தார். மறுமுனையில் டுப்ளிசிஸ் பவுண்டரிகளாக விளாசினார். இதனால், ரன்ரேட் தேவைப்படும் அளவிற்கே சென்றது.
நரைன் சுழல்ஜாலம்:
அபாரமாக ஆடிக்கொண்டிருந்த இந்த ஜோடியை சுனில் நரைன் பிரித்தார். அவரது சுழலில் மிரட்டலாக பேட் செய்து கொண்டிருந்த அக்ஷர் படேல் அவுட்டானார். அவர் 23 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்து அவுட்டானார். மறுமுனையில் அபாரமாக ஆடிக்கொண்டிருந்த டுப்ளிசிஸ் அரைசதம் விளாசி நம்பிக்கை அளித்தார்.
அடுத்து வந்த ஸ்டப்ஸ் 1 ரன்னில் அவுட்டாக, டுப்ளிசிஸ் அதிரடிக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதிரடியாக ஆட முயற்சித்த டுப்ளிசிஸ் நரைன் சுழலுக்கு இரையானார். அவர் 45 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 62 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால், கடைசி 20 பந்துகளில் 52 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி கட்ட பரபரப்பு:
களத்தில் விப்ராஜ் - அசுதோஷ் சர்மா அதிரடி காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். ஓவருக்கு 15 ரன்கள் மேல் தேவைப்பட்டதால் அதிரடியாக ஆட முயற்சித்த அசுதோஷ் சர்மா வருண் சக்கரவர்த்தி சுழலில் 7 ரன்னில் அவுட்டாக, அடுத்து வந்த ஸ்டார்க் டக் அவுட்டானார். கடைசி 12 பந்துகளில் டெல்லி வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது விப்ராஜ் அதிரடி காட்டினார். அவர் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசி கொல்கத்தாவை அச்சுறுத்தினார். ஹர்ஷித் ராணா வீசிய 19வது ஓவரில் மட்டும் சிக்ஸரும், பவுண்டரியும் விளாசியதால் கடைசி ஓவரில் 25 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ரஸல் வீசினார்.
கொல்கத்தா அபார வெற்றி:
முதல் பந்தில் ஒரு ரன் சமீரா எடுக்க, விப்ராஜ் அடுத்த பந்தில் பவுண்டரி விளாசினார். 3வது பந்தை ரஸல் டாட் பாலாக வீசினார். 4வது பந்திலும் பவுண்டரி விளாச 5வது பந்தில் விப்ராஜ் போல்டானார். அவர் 19 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார். கடைசியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், கொல்கத்தா அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
10வது போட்டியில் ஆடிய கொல்கத்தா அணிக்கு இது 4வது வெற்றியாகும். டெல்லி அணிக்கு 4வது தோல்வியாகும்.




















