Jasprit Bumrah: ”இப்ப வாங்கடா” தயாரான பல்தான்ஸ் - மும்பை அணியில் இணைந்த ஜஸ்பிரித் பும்ரா, ஆர்சிபிக்கு ஆப்பு?
Jasprit Bumrah: காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஜஸ்பிரித் பும்ரா, முற்றிலுமாக குணமடைந்து மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்துள்ளார்.

Jasprit Bumrah: மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தாலும், நாளை நடைபெற உள்ள பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது.
மும்பை அணியில் இணைந்த பும்ரா:
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின்போது காயமடைந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, தொடர்ந்து ஓய்வில் இருந்தார். தேசிய கிரிக்கெட் அகாடெமியில் அவரது உடல்தகுதி கண்காணிக்கப்பட்டு வந்தது. இதனால், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் விளையாடாமல் இருந்தார். இந்நிலையில் தான், காயத்திலிருந்து முற்றிலுமாக குணமடைந்த பும்ரா,மீண்டும் மும்பை அணியில் இணைந்துள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் பேசும் பும்ராவின் மனைவி, ”தனது கணவர் பும்ரா ஐபிஎல் போட்டியில் அறிமுகமானது, எதிர்கொண்ட கடினங்கள் மற்றும் தற்போது தவிர்க்க முடியாத நட்சத்திரமான வளர்ந்து இருப்பதை” ஒரு கதையாக தனது மகனுக்கு சொல்வது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அரியாசனத்தில் பும்ரா வீற்றிருப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
𝑹𝑬𝑨𝑫𝒀 𝑻𝑶 𝑹𝑶𝑨𝑹 🦁#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL pic.twitter.com/oXSPWg8MVa
— Mumbai Indians (@mipaltan) April 6, 2025
தடுமாறி வரும் மும்பை இந்தியன்ஸ்:
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியான மும்பை, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் தற்போது வரை பெரிதாக சோபிக்கவில்லை. இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் பின்தங்கியுள்ளது. பும்ரா இல்லாததால் சரியான கலாவையில் வெளிநாட்டு வீரர்களை சேர்த்து, வலுவான பிளேயிங் லெவனை தீர்மானிக்க முடியாமல் திணறி வருகிறது. நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளில் பிலே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற, இனி வரும் போட்டிகளில் பெரும்பாலானவற்றில் வெற்றி பெற வேண்டியது கட்டாயம். இந்த சூழலில் பும்ரா மீண்டும் அணியில் இணைவது, மும்பைக்கு நம்பிக்கை அளிக்கும் அம்சமாக உள்ளது.
⚡ 𝙏𝙃𝙐𝙉𝘿𝙀𝙍 🤝 𝔹𝕆𝕆𝕄 💥#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL pic.twitter.com/r7CGlYc4ai
— Mumbai Indians (@mipaltan) April 6, 2025
தாக்கத்தை ஏற்படுத்துவாரா பும்ரா?
தனது துல்லியமான யார்க்கர்ஸ், நெருக்கடியான நேரத்தில் கூட விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன், ரன்களை விட்டுக்கொடுக்காமல் எதிரணி மீது அழுத்தத்தை போடுவது, அணிக்கு கட்டாயம் விக்கெட் வேண்டும் என்ற சூழலில் கேப்டனின் ஒரே நம்பிக்கையாக பும்ரா திகழ்கிறார். மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றத்தை பெற இவர் மிக முக்கியமானவராக இருப்பார். அடுத்த போட்டியில், மும்பை அணி திங்கட்கிழமை வான்கடே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. ஆனால், அந்த போட்டியில் பும்ரா களமிறங்குவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.
ஐபிஎல் பும்ரா பயணம்:
ஐபிஎல் தொடரில் கடந்த 2013ம் ஆண்டு அறிமுகமான ஜஸ்பிரித் பும்ரா, தொடர்ந்து 11வது ஆண்டாகவும் மும்பை அணிக்காகவே களமிறங்கி வருகிறார். இதுவரை 133 போட்டிகளில் 165 விக்கெட்டுகளையும் குவித்துள்ளார். மும்பை அணி 5 முறை கோப்பைகளை வென்றதில் மிக முக்கிய பங்கு வகித்துள்ளார்.




















