IPL 2025 DC vs RR: போரல், ராகுல், அக்ஷர் மிரட்டல் அடி! 189 ரன்களை தொடுமா ராஜஸ்தான்?
IPL 2025 DC vs RR: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அக்ஷர் படேல், போரல், கே.எல்.ராகுல் அசத்தலான பேட்டிங்கால் டெல்லி அணி 188 ரன்களை விளாசியது.

ஐபிஎல் தொடரில் இன்று நடந்த 32வது போட்டியில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஈஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
தொடக்கம் அதிர்ச்சி:
இதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஆட்டத்தை அதிரடியாக தொடங்கிய ஜேம்ஸ் ப்ரேசர் 9 ரன்களுக்கு அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய கருண் நாயர் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக அவர் ரன் ஏதும் எடுக்கும் முன்பே ரன் அவுட்டானார். 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ராகுல் - அபிஷேக் போரல் ஆட்டத்தை தொடர்ந்தனர். அபிஷேக் போரல் அதிரடி காட்ட ராகுல் நிதானமாக ஆடினார்.
ராகுல் - போரல் அதிரடி:
அதிரடிக்கு மாற முயற்சித்த கே.எல்.ராகுல் 32 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அதிரடி காட்டி வந்த அபிஷேக் போரல் அவுட்டானார். அவர் 37 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 49 ரன்கள் எடுத்து அவுட்டானார். 105 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேப்டன் அக்ஷர் படேல் அதிரடி காட்டினார்.
அக்ஷர் படேல் அசத்தல்:
களமிறங்கியது முதலே பவுண்டரியும், சிக்ஸரும் விளாசிய அக்ஷர் படேல் ரன்மழை பொழிந்தார். அவர் பவுண்டரியும், சிக்ஸரும் விளாச டெல்லி ரன் ஜெட் வேகத்தில் எகிறியது. 14 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.
அவரது அதிரடியால் டெல்லி அணி எளிதாக 150 ரன்களை கடந்தது. கடைசி கட்டத்தில் ஸ்டப்ஸ் - அசுதோஷ் சர்மா அதிரடி காட்டினர். இறுதியில் கடைசியில் 20 ஓவர்களில் டெல்லி அணி 188 ரன்களை விளாசியது. ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். துஷார் தேஷ்பாண்டே, தீக்ஷனா, ஹசரங்கா பந்துவீச்சில் ரன்களை டெல்லி அணி விளாசியது.

