CSK Vs SRH: நாக் அவுட், சிஎஸ்கே கதை ஓவர்..! கம்பேக் கொடுக்குமா தோனி படை? பாய்ஸ் படை பட்டையை கிளப்புமா?
IPL 2025 CSK Vs SRH: ஐதராபாத் உடனான தோல்வியால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை அணி வெளியேறியதா? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

IPL 2025 CSK Vs SRH: ஐதராபாத் உடனான தோல்வியால் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் வெறும் 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
சென்னை அணி தோல்வி:
தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த சென்னை அணி, உள்ளூரில் நடைபெறும் போட்டி மூலமாவது மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் பேட்டிங்கில் சொதப்பியதால், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதன் காரணமாக இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் வெறும் இரண்டு வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. அதன் மூலம், 4 புள்ளிகள் மற்றும் நெகட்டிவ் ரன் ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. மேலும், சேப்பாக்கம் மைதானத்தில் வென்றதே இல்லை என்ற மோசமான சாதனையை ஐதராபாத் அணி முறியடித்துள்ளது. இந்நிலையில், சென்னை அணி நடப்பாண்டு பிலே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற இன்னும் வாய்ப்புள்ளதா? என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
ஐபிஎல் புள்ளிப்பட்டியல்:
| அணி | போட்டி | வெற்றி | தோல்வி | ரன்ரேட் | புள்ளிகள் |
| குஜராத் டைட்டன்ஸ் | 8 | 6 | 2 | 1.104 | 12 |
| டெல்லி கேபிடல்ஸ் | 8 | 6 | 2 | 0.657 | 12 |
| ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு | 9 | 6 | 3 | 0.482 | 12 |
| மும்பை இந்தியன்ஸ் | 9 | 5 | 4 | 0.673 | 10 |
| பஞ்சாப் கிங்ஸ் | 8 | 5 | 3 | 0.177 | 10 |
| லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 9 | 5 | 4 | -0.054 | 10 |
| கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 8 | 3 | 5 | 0.212 | 6 |
| சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 9 | 3 | 6 | -1.103 | 6 |
| ராஜஸ்தான் ராயல்ஸ் | 9 | 2 | 7 | -0.625 | 4 |
| சென்னை சூப்பர் கிங்ஸ் | 9 | 2 | 7 | -1.302 | 4 |
சென்னை அணிக்கு பிளே-ஆஃப்?
அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து சென்னை முழுமையாக தற்போது வரை வெளியேறவில்லை. மீதமுள்ள 5 போட்டிகளிலும் அபாரமாக வென்று, ரன்ரேட்டை மேம்படுத்தி மற்ற போட்டிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். அதேநேரம், ஐபிஎல் தொடர் 10 அணிகளாக விரிவுபடுத்தப்பட்டதிலிருந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2024 இல்) மட்டுமே, 14 புள்ளிகளுடன் பிளேஆஃப்களுக்குத் தகுதி பெற்ற ஒரே அணியாகும்.
சென்னைக்கு சாத்தியமா?
ஒருபுறம் சென்னை அணிக்கு மெல்லிய வாய்ப்புகள் இருந்தாலும், அது சாத்தியப்படுவது என்பது மிகவும் கடினமானதாகவே உள்ளது. காரணம், குஜராத், டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் ஏற்கனவே தலா 6 போட்டிகளில் வென்று பிளே-ஆஃப் ரேசில் முன்னிலை வகிக்கின்றன. இதுபோக மும்பை, பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள போட்டிகளில் கணிசமான வெற்றிகளை பெற்றாலே இந்த 6 அணிகளுக்குள்ளும் கடுமையான போட்டி நிலவும். எனவே அவற்றை தாண்டி சென்னை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்வது என்பது, மிகவும் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
கம்பேக் கொடுக்குமா தோனி படை?
2022ம் ஆண்டு சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்து வெளியேறிய சென்னை அணி அடுத்த ஆண்டே வலுவான கம்பேக் கொடுத்து சாம்பியன் பட்டம் வென்றது. அதேபாணியில் அடுத்த வருடம் கம்பேக் கொடுக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதோடு, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், ஏராளமான இளம் வீரர்கள் சென்னையின் பிளேயிங் லெவனில் களமிறங்கினர். அவர்கள் அபாரமாக செயல்பட்டு கவனத்தையும் ஈர்த்தனர். அடுத்த வருடமும் இதேபோன்று இளம் ரத்தத்தை பாய்ச்சி சென்னை அணி மீண்டும், வலுவான கம்பேக்கை பதிவு செய்யும், செய்ய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




















