IPL 2025 CSK: என்னதான் ஆச்சு நம்ம சென்னைக்கு? கம்பேக் சூப்பர் கிங்சாக உருவெடுக்குமா? கவலையே தொடருமா?
IPL 2025: நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஆடும் விதம் ரசிகர்களை மிகவும் வேதனைக்கு ஆளாகி வருகிறது. வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் ஆடும் பேட்டிங் ரசிகர்களிடம் விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது.

IPL 2025 CSK: ஐபிஎல் தொடரில் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அணியாக உலா வரும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ். 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு இந்த சீசன் கடும் சோதனையாக மாறி வருகிறது.
அடுத்தடுத்து தோல்வி:
தோனி தலைமையில் கோலோச்சி வந்த சென்னை சூப்பர்கிங்ஸ் அணி கடந்த சீசன் முதல் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்கி வருகிறது. இந்த சீசனில் முதல் போட்டியில் மும்பை அணியை எதிர்கொண்டு வெற்றி பெற்ற சென்னை அணி ஆர்சிபி, ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளது.
சென்னை அணி தோல்வி ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணி தோல்வியைத் தழுவியது என்பதை காட்டிலும் அவர்கள் ஆடிய விதம் மிகவும் கவலைக்குரிய வகையில் இருப்பதே ரசிகர்களின் விமர்சனத்திற்கு முக்கிய காரணம் ஆகும்.
போராட்ட குணம் எங்கே?
வெற்றி, தோல்வி என்பதை காட்டிலும் போராடாமலே சென்னை அணி பெங்களூர் மற்றும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் எதிரிணியிடம் சரண் அடைந்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வேதனையை மட்டுமின்றி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு ரவீந்திரா, கான்வே, ருதுராஜ், விஜய் சங்கர், ஷிவம் துபே, ஜடேஜா, தோனி, ராகுல் திரிபாதி, தீபக் ஹுடா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இருந்தும் சென்னை அணியின் பேட்டிங் என்பது சீட்டுக்கட்டு போல சரிந்து வருவது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது.
சென்னை அணி ஆடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் ரவீந்திரா மட்டுமே தொடர்ச்சியான மற்றும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், ராகுல் திரிபாதி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ஜடேஜா ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
வெற்றி வெறி எங்கே?
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 197 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்காக சிஎஸ்கே வீரர்கள் ஆடிய விதம் இலக்கை நோக்கி ஆடுவது போல இல்லாமல் இருந்தது. மேலும், தோனி வர வேண்டிய இடத்தில் அஸ்வின் களமிறங்கியதும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. பின்னர். அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங் தோனியின் உடல்தகுதி அளித்த பேட்டியும் தோனி மீதான விமர்சனத்தை அதிகப்படுத்தியது.
ஒரு காலத்தில் இலக்கு எவ்வளவு பெரியதாக இருந்தாலும் தோனி இருந்தால் எதிரணிக்கு கிலி ஆகும். ஆனால், இன்று எந்த வீரர் எதிரில் இருந்தாலும் சென்னை அணியை எளிதாக வீழ்த்தும் அளவிற்கு எதிரணியினர் மாறி உள்ளனர்.
கை கொடுக்காத டாப் ஆர்டர்:
இதையடுத்து, ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் சென்னையின் பேட்டிங் ஆர்டர் பெரியளவில் கை கொடுக்கவில்லை. சற்று போராடினாலும் அந்த போட்டியிலும் சென்னை தோல்வியைத் தழுவியது. அதேசமயம், நேற்று டெல்லி அணிக்கு எதிராக 184 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்காக ரவீந்திரா, கான்வே, ருதுராஜ், ஷிவம் துபே, ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.
மேலும், 11வது ஓவரில் தோனி களத்தின் உள்ளேயே வந்தும் தோனி - விஜய் சங்கரை களத்தில் வைத்துக் கொண்டே டெல்லி அணி வெற்றி பெற்றது. விஜய் சங்கர் 54 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தாலும் அவரது தனிப்பட்ட இன்னிங்ஸ் சென்னை அணிக்கு எந்த விதத்திலும் உதவிகரமாக அமையவில்லை.
பவுலிங் மோசம்:
இதுவரை சென்னை அணி ஆடிய 4 போட்டிகளில் கலீல் அகமது, நூர் அகமது தவிர யாருடைய பந்துவீச்சும் அணிக்கு உதவிகரமாக அமையவில்லை. அஸ்வின், ஜடேஜா ஆகிய அனுபவ பந்துவீச்சாளர்கள் இருந்தும் அவர்களால் ஆட்டத்தை மாற்ற இயலவில்லை. குறிப்பாக, 9 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட அஸ்வினின் பவுலிங் சொந்த மைதானத்திலே ஜொலிக்காதது ரசிகர்களுக்கு அதிருப்தியே ஆகும்.
செய்ய வேண்டியது என்ன?
இந்த நிலையில், சென்னை அணி மீது அந்த அணியின் ரசிகர்களே கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், சென்னை அணி அனைத்து விமர்சனங்களுக்கும் தனது ஆட்டத்தால் பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அணியை மறுசீரமைப்பதுடன் அனுபவ வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதுடன் மீண்டும் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய அவசியத்திலும் உள்ளனர்.
அதேபோல ஏலத்தில் எடுக்கப்பட்டு பெஞ்சில் உட்காரவைக்கப்பட்டுள்ள சென்னை அணியின் வீரர்களில் ஆட்டத்தை மாற்றும் திறன் கொண்ட வீரர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டியதும் தற்போது அவசியம் ஆகும். அப்போதுதான் சென்னை அணி மீண்டும் தொடரின் உள்ளே வர முடியும். இனி வரும் நாட்களில் சென்னை அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.