(Source: ECI/ABP News/ABP Majha)
MI Vs GT, IPL 2024: முன்னாள் சாம்பியன்கள் மும்பை -குஜராத் இன்று மோதல்! பாண்ட்யாவை வீழ்த்துவாரா கில்?
MI Vs GT, IPL 2024: ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
MI Vs GT, IPL 2024: மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதும் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் தொடர் 2024:
இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில், இரண்டாவது போட்டியில் முன்னாள் சாம்பியன்களான ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
மும்பை - குஜராத் மோதல்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார். அதேநேரம், குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இன்று முதல்முறையாக களமிறங்க உள்ளது. இதனால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு பிரிவுகளிலும், இரண்டு அணிகளும் சம்பலம் வாய்ந்தவையாக இருப்பது இன்றைய போட்டியை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. மும்பை பேட்டிங் லைன் -அப்பை ரோகித், இஷான் கிஷன், திலக் வர்மா, வதேரா, ஹர்திக் மற்றும் டிம் டேவிட் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் நிரப்புகின்றனர். அவர்களுக்கு இணையாக குஜராத் அணியில் கில், ஒமர்சாய், சாய் சுதர்ஷன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் உள்ளனர்.
பந்துவீச்சில் பும்ரா, மத்வால், கோட்சீ மற்றும் சாவ்லா ஆகியோருடன், ஆல்-ரவுண்டர் முகமது நபி மும்பை அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறாஅர். குஜராத் அணியை பொருத்தவரையில், உமேஷ் யாதவ், ரஷித் கான், ஜான்சன் மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோர் உள்ளனர். இருப்பினும், ஷமி இல்லாதது அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.
நேருக்கு நேர்:
மும்பை மற்றும் குஜராத் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவர 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 2 முறை வெற்றி பெற்றுள்ளன. குஜராத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் மும்பை அணி அதிகபட்சமாக 218 ரன்களையும், குறைந்தபட்சமாக 152 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், மும்பை அணிக்கு எதிராக ஒரு போட்டியில் குஜராத் அணி அதிகபட்சமாக 233 ரன்களையும், குறைந்தபட்சமாக 172 ரன்களையும் பதிவு செய்துள்ளது.
அகமதாபாத் மைதானம் எப்படி?
அகமதாபாத் மைதானம் கடந்த தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால், பல போட்டிகளில் ரன் மழை பொழிந்தது. இன்றைய போட்டியிலும் ஆடுகளம் அதேநிலையில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்கும் வாய்ப்பு இல்லை என்பதால், போட்டி எந்தவித இடையூறும் இன்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தேச அணி விவரங்கள்:
மும்பை பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா, இஷான் கிஷான், நேஹால் வதேரா, திலக் வர்மா, டிம் டேவிட், ஹர்திக் பாண்ட்யா, முகமது நபி, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா, ஆகாஷ் மத்வால், பியூஷ் சாவ்லா
குஜராத் பிளேயிங் லெவன்: சுப்மான் கில், விருத்திமான் சாஹா, அஸ்மத்துல்லா ஓமர்சாய், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ஷாருக் கான், ரஷித் கான், சாய் சுதர்சன், ஸ்பென்சர் ஜான்சன், கார்த்திக் தியாகி, உமேஷ் யாதவ்