(Source: ECI/ABP News/ABP Majha)
GT vs PBKS Match Highlights: குஜராத் கோட்டையில் கொடி நாட்டிய பஞ்சாப் கிங்ஸ்; கடைசி ஓவரில் த்ரில் வெற்றி!
IPL 2024 GT vs PBKS Match Highlights: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
17வது ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது.குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது. குஜராத் அணி சார்பில் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். வில்லியம்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில்தான் களமிறங்கினார். டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச முடிவு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 199 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரராக களமிறங்கி இறுதி வரை களத்தில் இருந்த குஜராத் கேப்டன் சுப்மன் கில் 48 பந்தில் 6 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசி 89 ரன்கள் சேர்த்திருந்தார்.
அதன் பின்னர் 200 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு பவர்ப்ளேவில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. பவர்ப்ளேவில் தொடக்க வீரர்கள் தங்களது விக்கெட்டினை இழந்தனர். இரண்டாவது ஓவரில் ஷிகர் தவான் ஒரு ரன்னிலும், ஆறாவது ஓவரில் ஜானி பேரிஸ்டோவ் 22 ரன்னில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
இரண்டு விக்கெட்டுகள் விழுந்தாலும் பவர்ப்ளேவில் பஞ்சாப் அணி 54 ரன்கள் சேர்த்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம் கரன் 5 ரன்னில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேற, போட்டியில் குஜராத் அணியின் கரங்கள் மெல்ல மெல்ல உயர்ந்தது. பிரப்சிம்ரன் ஓரளவுக்கு சிறப்பாக விளையார, ஷிகந்தர் ராசா தடுமாறினார். இவர்கள் இருவரும் தங்களது விக்கெட்டினை இழந்த பின்னர், ஆட்டத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியது.
குறிப்பாக ஷஷாங்க் சிங் சிறப்பாக விளையாடி தனது பங்களிப்பை அணிக்கு தொடர்ந்து வழங்கி வந்தார். இவர் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசி வந்தார். இவருடன் இணைந்த பஞ்சாப் அணியின் இம்பேக்ட் ப்ளேயர் அஷூதோஷ் சர்மா, ஷஷாங்க் சிங்கிற்கு ஒத்துழைப்பு தரும் வகையில் விளையாடினார். பொறுப்புடனும் அதிரடியாகவும் விளையாடிய ஷஷாங்க் சிங் 25 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார்.
கடைசி இரண்டு ஓவர்களில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் பஞ்சாப் அணி 18 ரன்கள் சேர்த்தது. இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் மட்டும் தேவைப்பட்டது. 20வது ஓவரை வீசிய நல்கண்டே முதல் பந்தில் அஷூதோஷ் சர்மா விக்கெட்டினை கைப்பற்றினார். அடுத்த பந்தை வைய்டாக வீச, பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 5 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் வெற்றி இலக்கை ஒரு பந்தை மீதம் வைத்து எட்டியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இறுதி வரை களத்தில் இருந்த ஷஷாங் சிங் 29 பந்தில் 6 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசி 61 ரன்கள் குவித்திருந்தார். குஜராத் அணி தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது குஜராத் அணி இந்த போட்டியில் மொத்தம் 9 கேட்ச்களை மிஸ் செய்திருந்தது.