GT vs DC Innings Highlights: சொந்த மண்ணில் படுசொதப்பல்; டெல்லியின் பவுலிங்கின் முன் சரணடைந்த குஜராத்; 89 ரன்களுக்கு ஆல்அவுட்!
IPL 2024 GT vs DC Innings Highlights: டெல்லி அணிக்கு எதிராக குஜராத் அணி எடுத்த 89 ரன்கள், ஐபிஎல் வரலாற்றில் குஜராத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக பதிவாகியுள்ளது.
17வது சீசன் ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது. குஜராத் அணியில் கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடமல் இருந்த டேவிட் மில்லர் இந்த போட்டியில் அணிக்குத் திரும்பினார்.
குஜராத் அணியின் இன்னிங்ஸை சுப்மன் கில் மற்றும் விரத்திமான் சஹா ஆகியோர் தொடங்கினர். ஆட்டத்தின் தொடக்கம் முதல் குஜராத் அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார். நான்காவது ஓவரின் ஐந்தாவது பந்தில் சஹாவும், ஐந்தவது ஓவரின் முதல் பந்தில் சாய் சுதர்சனும், ஐந்தாவது ஓவரின் கடைசி பந்தில் டேவிட் மில்லரும் தங்களது விக்கெட்டினை அடுத்தடுத்து இழந்து வெளியேறினர். இது குஜராத் அணிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யாரும் சிறப்பாக விளையாடவில்லை. 5 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் பவர்ப்ளேவில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராக அமைந்தது.
அதன் பின்னராவது குஜராத் அணி நிதானமாக விளையாடும் என எதிர்பார்த்த நிலையில், அபினவ் மனோகர் 9வது ஓவரின் மூன்றாவது பந்திலும் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய ஷாரூக் கான் 9வது ஓவரின் நான்காவது பந்திலும் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர்.
இது குஜராத் அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. அணியில் பெரும் சரிவில் இருந்து மீட்பார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்ட ராகுல் திவேதியா மற்றும் ரஷித் கான் கூட்டணி இரண்டு ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்தது. 12வது ஓவரின் இரண்டாவது பந்தில் ராகுல் திவேதியா தனது விக்கெட்டினை எல்.பி.டபள்யூ முறையில் இழந்து வெளியேறினார்.
இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் தாக்குப்பிடிக்குமா? 100 ரன்களையாவது எட்டுவார்களா என்ற கேள்வி எல்லாம் எழுந்தது. ரஷிக் கானுடன் இணைந்த மோகித் சர்மா சிறுது நேரம் விக்கெட்டினை இழக்காமல் விளையாடி வந்தார். இறுதியில் குஜராத் அணி 17.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்கள் மட்டும் எடுத்தது. குஜராத் அணி சார்பாக ரஷித் கான் 31 ரன்கள் எடுத்ததே இன்றைய போட்டியில் குஜராத் அணியின் சார்பில் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக பதிவாகியுள்ளது.