CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
IPL 2024 CSK vs RR Match Highlights: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதால், ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு கொஞ்சம் பிரகாசமாகியுள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு கொஞ்சம் பிரகாசமாகியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் சேர்த்தது. அடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் இருந்து அதிரடியாக விளையாடத் தொடங்கியது. இது ராஜஸ்தான் அணிக்கு சவாலாக அமைந்தது. அதிரடியாக ஆடி வந்த ரச்சின் ரவீந்திரா விக்கெட்டினை ரவிச்சந்திரன் கைப்பற்றினார். பவர்ப்ளே முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 56 ரன்கள் சேர்த்தது.
ஆடுகளம் தொடர்ந்து பேட்டிங்கிற்கு சவாலாகவே இருந்ததால் சென்னை அணி வீரர்களும் ரன்கள் சேர்க்க திணறினர். ஆனால் ராஜஸ்தான் நிர்ணயித்த இலக்கினை எட்டும் நோக்கில் சிறப்பாகவே விளையாடிவந்தது. 8வது ஓவரின் ஐந்தாவது பந்தில் டேரில் மிட்ஷெல் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 13 பந்துகளை எதிர்கொண்டு அதில் 4 பவுண்டரிகளை அட்டகாசமாக விளாசி மொத்தம் 22 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த மொயின் அலி 13 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் வெளியேற, ஆட்டம் கொஞ்சம் சூடுபிடிப்பதாக இருந்தது.
ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் மைதானத்தின் தன்மையை நன்கு உணர்ந்து களமிறங்கும் வீரர்களை கூடுமானவரை அதிரடியாக விளையாடச் சொல்லிவிட்டு மறுமுனையில் நிலையான ஆட்டத்தினை வெளிப்படுத்தவேண்டும் எனும் நோக்கில் விளையாடி வந்தார். மொயின் அலி தனது விக்கெட்டினை இழந்த பின்னர் களமிறங்கிய சிவம் துபே 11 பந்தில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட மொத்தம் 18 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.
விதிகளை மீறிய ஜடேஜா
ஆட்டத்தின் 16வது ஓவரில் ரன் எடுக்க ஓடும்போது ஜடேஜா ஸ்டெம்புகளை மறைத்தபடி ஓடியதால், ஃபீல்டிங்கிற்கு இடையூறு செய்ததாகக் கூறி அவருக்கு அவுட் கொடுத்து வெளியேற்றினார் மூன்றாவது நடுவர்.
இறுதியில் சென்னை அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.