Virat Kohli Record: அதிக சதங்கள்.. ஐ.பி.எல்.லின் 'ராக்கி' விராட்கோலி புதிய வரலாறு..! நெருங்க முடியுமா..?
Virat Kohli Record: ஐபிஎல் தொடரில் அதிக சதம் விளாசியவர் என்ற சாதனையை விராட் கோலி குஜராத் அணிக்கு எதிராக அடித்த சதத்தின் மூலம் எட்டியுள்ளார்.
Virat Kohli Record: ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் லீக் போட்டிகள் முடிவுக்கு வந்து விட்டது. ப்ளேஆஃப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை என நான்கு அணிகள் முன்னேறியுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அணி குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற தோல்வியால் ப்ளேஆஃப் வாய்ப்பை நழுவவிட்டது.
புதிய வரலாறு:
இந்த ஐபிஎல் தொடரில் வழக்கம் போல் இதற்கு முன்னர் இருந்த சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் மிக முக்கியமானது என்னவென்றால், பெங்களூரு அணியின் நாயகன் விராட் கோலி ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசினார். இந்த சதம் 16வது சீசனில் விராட் விளாசிய இரண்டாவது சதமாகும். இதன் மூலம், ஒட்டு மொத்த ஐபிஎல் வரலாற்றில் தனிநபராக விராட் கோலி 7வது சதத்தினை விளாசியுள்ளார். இதன் மூலம் 6 சதங்கள் விளாசிய கிறிஸ் கெயிலின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் இதுவரை 86 சதங்கள் விளாசப்பட்டுள்ளன. இதில் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் முதல் போட்டிட்யில் கொல்கத்தா அணிக்காக மெக்கல்லம் சதம் விளாசினார். இந்த சதம் தான் ஐபிஎல் தொடரின் முதல் சதமாகும். இந்நிலையில் நேற்று அதாவது மே மாதம் 21ஆம் தேதி இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. இதில் மொத்தம் மூன்று சதங்கள் விளாசப்பட்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் ஒரே நாளில் மூன்று சதங்கள் விளாசப்பட்டது இது தான் முதல் முறை.
நேற்றைய போட்டிக்கு முன்னர் வரை ஐபிஎல் தொடரில் தனி நபர் அதிகபட்ச சதங்களின் எண்ணிக்கையாக 6 சதங்கள் இருந்தது. இதனை கிறிஸ் கெயிலுடன் விராட் கோலி பகிர்ந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் அடித்த சதத்தின் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில் முதல் இடத்துக்குச் சென்றார்.
மேலும், விராட் கோலி கிறிஸ் கெயிலின் சாதனையை குஜராத் அணியுடனான போட்டிக்கு முந்தைய போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக சதம் அடித்து சமன் செய்தார். இதன் மூலம் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சதம் விளாசியவர்கள் பட்டியலிலும் விராட் கோலி இணைந்து கொண்டார். இதற்கு முன்னதாக ஷிகர் தவான், டேவிட் வார்னர், பட்லர் ஆகியோர் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசினார். இவர்களுடன் தற்போது விராட் கோலி இணைந்துள்ளார். அதேபோல் பெங்களூரு அணிக்கு எதிராக சுப்மன் கில் சதம் விளாசினார். இந்த சதம் ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்த போட்டியில் அடிக்க சதமாகவும் பதிவானது. இதனால் இந்த வரிசையில் சுப்மன் கில்லும் இணைந்துள்ளார்.