Rohit Sharma in IPL: 200வது டி20 போட்டியில் கேப்டன்..! கிடைத்த வாய்ப்பை தவறவிட்டு ரசிகர்களை ஏமாற்றிய ரோகித்..!
இந்திய கேப்டன் ரோகித் சர்மா 200-வது டி-20 போட்டியில் கேப்டனாக செயல்பட்டு சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
இந்திய கேப்டன் ரோகித் சர்மா 200-வது டி-20 போட்டியில் கேப்டனாக செயல்பட்டு சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அதேநேரம், பேட்டிங்கின் போது கிடைத்த இரண்டு வாய்ப்புகளையும் கோட்டைவிட்டு தனது விக்கெட்டையும் பறிகொடுத்தார்.
200வது போட்டியில் கேப்டன்:
சர்வதேச டி-20 போட்டி, ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் ஆகியவற்றில் சேர்த்து 199 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு இருந்த ரோகித் சர்மா, நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக களமிறங்கியது கேப்டனாக அவர் விளையாடும் 200வது டி-20 போட்டியாகும்.
200 டி-20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்ட மூன்றாவது வீரர் எனும் பெருமையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார். இந்த பட்டியலில் 307 டி-20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு தோனி முதலிடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து, மேற்கிந்திய வீரர் சம்மி 208 போட்டிகளுக்கும், ரோகித் சர்மா 200 போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் 190 டி-20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு, கோலி நான்காவது இடத்தில் உள்ளார்.
கோட்டை விட்ட ரோகித் சர்மா:
கேப்டனாக 200வது போட்டியில் களமிறங்கிய ரோகித் சர்மாவுக்கு, ஒரு ரன் - அவுட் வாய்ப்பையும், முகமது சிராஜ் பந்துவீச்சில் கிடைத்த எளிய கேட்ச் வாய்ப்பையும் தவறவிட்டனர். ஆனாலும், 10 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சர்மா, வெறும் 1 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
ரோகித் கேப்டன்ஷிப்:
2013ம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட்டு வருகிறார். இவரது தலைமையில் அந்த அணி 5 முறை கோப்பையை வென்று, அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை மும்பை அணி வகித்து வருகிறது. அதோடு ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு தொடர்ந்து 10 ஆண்டுகள் முழு நேர கேப்டனாக செயல்பட்ட இரண்டாவது வீரர் எனும் பெருமையை நடப்பு தொடரின் மூலம் ரோகித் சர்மா பெற்றார். இதனிடையே, கடந்த 2021ம் ஆண்டு இந்திய அணியின் முழு நேர கேப்டனாகவும் ரோகித் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளி விவரங்கள்:
இதுவரை ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்ட 199 போட்டிகளில் 122 போட்டிகளில் வெற்றியும், 73 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்தார். 4 போட்டிகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. குறிப்பாக ஐபிஎல் தொடரில் 143 போட்டிகளில் ரோகித் சர்மா மும்பை அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
அதில், 79 போட்டிகளில் வெற்றியும், 60 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளார். 4 போட்டிகளில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. சர்வதேச டி-20 போட்டிகளில் 51 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 39 போட்டிகளில் வெற்றியும், 12 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளார். இதேபோன்று சாம்பியன்ஸ் லீக் தொடரில் 5 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள ரோகித் சர்மா, 4 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் பதிவு செய்துள்ளார்.