IPL 2023 Playoff Scenario: நெருக்கடியில் களமிறங்கும் பெங்களூரு... தோற்றால் சென்னையின் Playoff எண்ட்ரி உறுதி..!
IPL 2023 Playoff Scenario: ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தோல்வியைச் சந்தித்தால் சென்னை மற்றும் லக்னோ அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
IPL 2023 Play Off; ஐபிஎல் தொடர் தொடங்கி கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் முடிந்து விட்டது என யாராவது கூறினால் அதனை நம்ப நாமே சற்று யோசிப்போம். ஆனால் அது தான் உண்மை. கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கப்பட்ட 16வது சீசன் ஐபிஎல் தொடரானது தனது லீக் போட்டிகளின் இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. இந்நிலையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ள மற்றும் முன்னேறவுள்ள அணிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
மொத்தம் 10 அணிகள் களமிறங்கியிருந்தாலும் ப்ளேஆஃப் சுற்றுக்கு 4 அணிகள் தான் முன்னேற முடியும். கடந்த வார இறுதியில் 10 அணிகளுக்கும் ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பில் நீடித்தன. ஆனால் தற்போது (மே, 18ஆம் தேதி) ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பினை டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகள் இழந்துள்ளன. மேலும், குஜராத் அணி முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அதேபோல் சென்னை மற்றும் லக்னோ அணிகள் 15 புள்ளிகளுடன் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. 14 புள்ளிகளுடன் மும்பை அணி நான்காவது இடத்தில் உள்ளன.
பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் 12 போட்டிகளில் விளையாடியுள்ளன, இந்த அணிகளைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் தலா 13 போட்டிகளில் விளையாடி விட்டன. இந்நிலையில் இன்று பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் பெங்களூரு அணி தோல்வியைச் சந்திக்கும் பட்சத்தில் புள்ளிப்படியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள சென்னை மற்றும் லக்னோ அணிகள் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இந்த போட்டியில் பெங்களூரு வென்றால், புள்ளிப்பட்டியலில் 4வது இடத்துக்கு முன்னேறுவதுடன் தனது ப்ளே ஆஃப் வாய்ப்பினை தக்கவைக்கும். ஆனால் குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலும் வெல்ல வேண்டும். மேலும் சென்னை லக்னோ அணிகள் தங்களது இறுதிப் போட்டியில் வெல்ல வேண்டும்.
அதேபோல், நான்காவது இடத்தில் உள்ள மும்பை அணி ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியை வென்றால் 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப்புக்குள் சென்று விடும். அதேநேரத்தில் மும்பை தோற்று, ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் தங்களது இறுதிப் போட்டியில் வென்றால், மும்பை அணி தொடரில் இருந்து வெளியேறும்.
ராஜஸ்தான் அணியைப் பொறுத்தமட்டில், பஞ்சாப் அணியுடன் நாளை மோதவுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் தோல்வியைச் சந்தித்தால் தொடரில் இருந்து வெளியேறும். அதேபோல் இந்த போட்டியில் வென்றும், பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் தங்களுக்கு மீதமுள்ள போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.
கொல்கத்தா அணியைப் பொறுத்தமட்டில் 13 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகளுடன் இருந்தாலும், அதன் ப்ளே ஆஃப் வாய்ப்பு என்பது அதிசயம் நடந்தால்தான் முடியும். காரணம் அந்த அணியின் ரன்ரேட். கொல்கத்தா தனக்கு மீதமுள்ள லக்னோவுக்கு எதிரான போட்டியில் வென்றால் கூட அதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது. அந்த அணி முன்னேற வேண்டும் என்றால், லக்னோவை 150 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும், அல்லது லக்னோ அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி அந்த அணி நிர்ணயம் செய்யும் இலக்கை விக்கெட் இழப்பின்றி 8 ஓவர்களில் எட்ட வேண்டும்.