IPL 2023 Mumbai Indians: பேட்டிங்கில் தட்டுத் தடுமாறும் மும்பை இந்தியன்ஸ்; பவுலிங்கில் படு மோசம்; வரும் காலங்களில் என்ன செய்யப்போகிறார் ரோகித்
IPL 2023 Mumbai Indians: அதிக முறை கோப்பைகளை வென்ற அணியான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
அதிக முறை கோப்பைகளை வென்ற அணியான மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் கோலகலமாக தொடங்கி ஒவ்வொரு அணியும் புள்ளிப் பட்டியலில் தங்களை எப்படி உயர்த்துவது என்ற முனைப்பில் விளையாடி வருகின்றன. ஆனால் இன்னும் வெற்றிக்கு திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கும் அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் தான். இரு அணிகளில் பெரும் கவனத்தினை பெரும் அணி என்றால் அது மும்பை இந்தியன்ஸ் அணி தான். ஐந்து முறை கோப்பையை வென்றுள்ள இந்த அணி ஒரு வெற்றிக்காக போராடி வருகிறது.
ரோகித் சர்மா தலைமயிலான இந்த அணி பேப்பரில் அதாவது ஒரு அணியாக பார்க்கும் போது மிகவும் வலுவான அணியாக உள்ளது. ஆனால் அந்த அணியின் செயல்பாடு அணி நிர்வாகத்திற்கோ ரசிகர்களுக்கோ மிகவும் திருப்திகரமானதாக இல்லை. கடந்த இரண்டு போட்டிகளில் பேட்டிங்கைப் பொறுத்த வரையில் திலக் வர்மா மட்டும் தான் சிறப்பாக செயல் பட்டுள்ளார். அவரைத் தவிர வேறு யாருமே குறிப்பிடும் படியான ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை. ரூபாய் 17.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் கேமரூன் கிரீன் இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 17 ரன்கள் தான் எடுத்துள்ளார். அதேபோல், சூர்ய குமார் யாதவ் மிகவும் மோசமான மற்றும் பொறுப்பற்ற ஆட்டத்தால் வெறும் 12 ரன்கள் தான் சேர்த்துள்ளார். கேப்டன் ரோகித் சர்மா நிதானமாக ஆடினாலும் அவரால் நிலையான ஆட்டத்தினை தர முடியவில்லை.
மிகவும் வலுவான பந்துவீச்சு அணியாக கருதப்படும் இந்த அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 5 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளனர். இது ரோகித் சர்மாவிற்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. பந்துவீச்சில் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஆர்ச்சரின் பந்துவீச்சு எடுபடவில்லை. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி ஃபீல்டிங்கில் மோசமாகவே செயல்பட்டு வருகிறது. பந்து வீச்சாளர்கள் கேப்டனுடன் கலந்துரையாடாமல் பந்துகளை வீசுவதாலே விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் போகிறது என கூறப்படுகிறது. பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா ஊடங்கங்களிடம் கூறியது, நான் கடந்த ஆறேழு மாதங்களாக பும்ரா இல்லாமல் மிகவும் சிரமப் படுகிறேன் என கூறியிருந்தார்.
இந்த முறை ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வெல்ல வேண்டுமானால், ஒரு அணியாக இணைந்து, பொறுப்புடன் செயல்படவேண்டியது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதிகப்படியான ரசிகர் பட்டாளத்தினைக் கொண்டுள்ள மும்பை அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை இன்று டெல்லி அணியுடனான ஆட்டத்தின் போது தான் கண்டு பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.