IPL 2023, KKR vs LSG: பகையுடன் காத்திருக்கும் கொல்கத்தா... லக்னோ அணியுடன் இன்று மோதல்.. ஐபிஎல் வரலாறு சொல்வது என்ன?
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 2வது ஆட்டத்தில் கொல்கத்தா அணியை, லக்னோ அணி சந்திக்கிறது. இந்த போட்டி பிளே ஆஃப் செல்ல லக்னோ அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும்.
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 2வது ஆட்டத்தில் கொல்கத்தா அணியை, லக்னோ அணி சந்திக்கிறது. இந்த போட்டி பிளே ஆஃப் செல்ல லக்னோ அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும்.
ஐபிஎல் திருவிழா நிறைவு கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் லீக் போட்டிகளில் இதுவரை 66 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. 10 அணிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. மீதமுள்ள இடங்களில் மும்பை, சென்னை, லக்னோ, பெங்களூரு முட்டிமோதுகின்றது. பஞ்சாப், டெல்லி, ஹைதராபாத் தொடரிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் ஏதாவது அதிசயம் நடக்காதா என காத்திருக்கிறது.
கொல்கத்தா - லக்னோ மோதல்
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 67வது ஆட்டத்தில் டெல்லி - சென்னை அணிகள் மோதுகின்றது. இப்போட்டி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு 68வது ஆட்டம் நடைபெறுகிறது. இதில் ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோ சினிமா செயலிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை...
நடப்பு ஐபிஎல் தொடரில் 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள லக்னோ அணி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லாத போட்டி என மொத்தம் 15 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இதேபோல் கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் முதல்முறையாக மோதுகின்றது. இதனால் இப்போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நேருக்கு நேர் மோதிய போட்டிகள்
ஐபிஎல் சீசனில் கடந்தாண்டு தான் லக்னோ அணி அறிமுகமானது. அந்த சீசனில் கொல்கத்தா அணியை லக்னோ 2 முறை எதிர்கொண்டது. இந்த 2 போட்டிகளிலும் லக்னோ அணியே வெற்றி பெற்றது. இந்த 2 ஆட்டத்திலும் லக்னோ அணியே முதலில் பேட் செய்திருந்தது. இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் பழைய தோல்விக்கு கொல்கத்தா பழி தீர்க்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் லக்னோ அணிக்கு இந்த போட்டி பிளே ஆஃப் செல்ல முக்கியமான போட்டி என்பதால் அந்த அணியும் வெற்றிக்கு போராடும் என்பதால் இப்போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.