CSK vs KKR, IPL 2023: தோனி படையுடன் மோதும் கொல்கத்தாவின் இளம் படை..! வெற்றியை தொடருமா சென்னை?
ஐபிஎல் தொடரில் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.
ஐபிஎல் தொடரில் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.
சென்னை - கொல்கத்தா அணிகள் மோதல்:
ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.
சென்னை அணி நிலவரம்:
நடப்பு தொடரில் சென்னை அணி இதுவரை 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது. தோனி தலைமையிலான அணியில் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே, ரகானே, ஷிவம் துபே ஆகியோர் தொடர்ந்து பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜடேஜா, மொயின் அலி ஆல்ரவுண்டர்களாக அசத்த, பதிரனா மற்றும் துஷார் பாண்டே ஆகியோர் வேகப்பந்துவீச்சில் நம்பிக்கை அளித்து வருகின்றனர். காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ் இன்று களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எளிமையாக வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா அணி நிலவரம்:
நடப்பு தொடரில் கொல்கத்தா அணி 6 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்து வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. நிதிஷ் ராணா, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங் போன்ற தரமான பேட்ஸ்மேன்கள் மற்றும் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி மற்றும் பெர்கூசன் போன்ற தரமான பந்துவீச்சாளர்கள் இருந்தும், அவர்கள் நிலையான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தாதே கொல்கத்தாவின் தோல்விக்கு காரணமாக உள்ளது. உள்ளூர் போட்டியில் வென்று தொடர் தோல்விகளுக்கு முடிவு கட்ட கொல்கத்தா அணி முனைப்பு காட்டி வருகிறது.
மைதானம் எப்படி?
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சற்றே சாதகமாக இருந்தாலும், பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே ஈடன் கார்டன் மைதானம் அமைந்துள்ளது. டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும்.
சிறந்த பேட்ஸ்மேன்: கான்வே இன்றைய போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பேட்ஸ்மேன் ஆக இருக்கக் கூடும்
சிறந்த பந்துவீச்சாளர்: ஆல்-ரவுண்டர் ஜடேஜா பந்துவீச்சால் கொல்கத்தா அணிக்கு நெருக்கடி தர வாய்ப்புள்ளது
யாருக்கு வெற்றி வாய்ப்பு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு