GT vs CSK, Final Match Highlights: வெறித்தனம்.. இறுதிவரை திக்.. திக்.. ஐந்தாவது முறையாக கோப்பையை வென்ற சிஎஸ்கே..!
IPL 2023 Final, GT vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி 5வது கோப்பையை வென்றது.
16வது சீசன் ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள அகமாதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி திட்டமிட்டபடி நேற்று நடத்தப்படவில்லை, காரணம் அதிகப்படியான மழை தான். இதனால் போட்டி இன்று அதாவது மே 29ஆம் தேதி மாலை 7 மணிக்கு தொடங்கப்பட்டு, மீண்டும் மழை பெய்ததால், 30ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய குஜராத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 214 ரன்கள் சேர்த்தது. குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 96 ரன்கள் சேர்த்திருந்தார். அதன் பின்னர் களமிறங்கிய சென்னை அணி முதல் ஓவரின் மூன்று பந்துகளை மட்டுமே சந்தித்து 4 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது தொடங்கிய கனமழை இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்ததால், போட்டி நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் நடுவர்களின் பல கட்ட சோதனைகளுக்குப் பின்னர், போட்டி, நள்ளிரவு 12.10க்கு தொடங்கப்பட்டது.
டக்வெர்த் லூயிஸ் விதிமுறைப்படி போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால், சென்னை அணிக்கான வெற்றி இலக்கு 171 ஆக நிர்ணயிக்கப்பட்டது. மேலும், 4 ஓவர்கள் மட்டும் பவர்ப்ளே ஓவர்களாக வீச முடியும் எனவும், ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 3 ஓவர்கள் மட்டும் வீச முடியும். நள்ளிரவில் போட்டி தொடங்கப்பட்டாலும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பட்டாளம் போட்டியை காண ஆரவாரத்துடன் காத்திருந்தது.
இந்நிலையில், களமிறங்கிய சென்னை அணி குஜராத் அணியின் பந்து வீச்சினை பவர்ப்ளேவில் அடித்து நொறுக்கினர். 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் சேர்த்தனர். இவர்களின் அதிரடி ஆட்டத்தினால் சென்னை அணி இலக்கை நோக்கி கிடுகிடுவென முன்னேறியது. 6 ஓவர்களில் 72 ரன்கள் குவித்த இந்த ஜோடியை 7வது ஓவரினை வீசிய நூர் அகமது அடுத்தடுத்து வீழ்த்தினார். இது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
ஆனால் அதன் பின்னர் இணைந்த டூபே மற்றும் ரஹானே ஜோடி அதிரடியாக ஆடி சென்னை அணியை 9.1 ஓவரில் 100 ரன்களை எட்டவைத்தனர். அதன் பின்னரும் பொறுப்புடன் இவர்கள் ஆடியதால், சென்னை அணியை இலக்கினை நோக்கி முன்னேறவைத்தனர். அதன் பின்னர், அதிரடியாக சிக்ஸர்கள் விளாசி வந்த ரஹானே தனது விக்கெட்டை மோகித் சர்மா பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
அதன் பின்னர் வந்த ராயுடுவும் டூபேவுடன் இணைந்து சிறப்பாக ஆட, சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 38 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அதன் பின்னர் 13வது ஓவரை வீசிய மோகித் சர்மா அந்த ஓவரில் 2 சிக்ஸர் ஒரு பவுண்டரி விட்டுக்கொடுத்து, ராயுடு மற்றும் தோனியின் விக்கெட்டை அடுத்தடுத்து கைப்பற்றினார். இதனால் போட்டி குஜராத் கரங்களுக்குச் சென்றது. இறுதி ஓவரில் சென்னை அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்து டாட் பாலாக வீசிய மோகித் சர்மா, அடுத்த மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் விட்டுக்கொடுக்க, கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அந்த இரண்டு பந்துகளையும் எதிர்கொண்ட ஜடேஜா, முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டி, இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.