IPL 2023, DC vs CSK: வென்றால் Play-Off.. டெல்லியை வீழ்த்துமா சென்னை? டாஸ் வென்று பேட்டிங் தேர்வு..!
IPL 2023, DC vs CSK: டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2வது முறையாக டெல்லி அணியுடன் மோதுகிறது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் இந்த சீசனில் கடைசி லீக் ஆட்டம் என்பதால் இரு அணிகளும் வெற்றியுடன் முடிக்கவே முயற்சி செய்யும்.
கடந்த ஒன்றரை மாத காலமாக விறுவிறுப்பாக நடந்து வந்த ஐபிஎல் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 66 போட்டிகள் நடந்துள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு மற்ற அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இதனிடையே இன்று நடக்கும் 67வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றது.
16-வது சீசனில் நடந்தது என்ன?
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி, 5 போட்டிகளில் தோல்வி, முடிவில்லா ஒரு போட்டி என மொத்தம் 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. டெல்லி அணியோ 13 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 8 தோல்விகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்தஜ் போட்டி சென்னை அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும். அதே சமயம் தோற்றால் பிற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியதாக இருக்கும்.
இதுவரை நேருக்கு நேர்
இரண்டு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சென்னை அணி 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக டெல்லி - சென்னை அணிகள் இடையே நடந்த ஆட்டங்களில் சென்னை அணி 3 முறை வெற்றி பெற்றுள்ளது. மேலும் நடப்பு சீசனில் சென்னையில் நடந்த போட்டியில் சென்னை அணி டெல்லியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. ஆனால் இந்த ஆட்டத்தில் சென்னை அணி வீரர்கள் யாருமே 25 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. அந்த அளவுக்கு டெல்லி அணி தனது சுழற்பந்து வீச்சால் சென்னை அணியை கட்டுப்படுத்தியிருந்தது.
உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது டெல்லி அணிக்கு சாதகமான விஷயமாகும். மேலும் கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு சென்னை அணியை டெல்லி பழிதீர்க்கும் என்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.