CSK vs KKR Tickets: சேப்பாக்கத்தில் சென்னை அணியின் கடைசி லீக் போட்டி.. டிக்கெட் விற்பனை எப்போது? - வெளியான அறிவிப்பு
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையேயான லீக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
16வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் சென்னை, மும்பை, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, லக்னோ, பெங்களூரு, பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இதுவரை54 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு சென்னை, மும்பை, லக்னோ, ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரு, கொல்கத்தா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சென்னை அணி நிலவரம்
ஐபிஎல் தொடரில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை அந்த அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு போட்டி டை என 13 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அடுத்ததாக அந்த அணி இன்று (மே 10) டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சென்னை சேப்பாக்கத்தில் எதிர்கொண்டு விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் மே 14 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகின்றது.
முன்னதாக ஈடன் கார்டனில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்த லீக் போட்டியில் சென்னை அணி கொல்கத்தாவை 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பழிதீர்த்து பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்க இரு அணிகளும் போராடும் என்பதால் ரசிகர்கள் இப்போட்டியை ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
டிக்கெட் விற்பனை
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் (மே 12) காலை 7 மணி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட்டுகள் விற்கப்படும் நிலையில், இதனைப் பெற்ற இரவு முதலே ரசிகர்கள் குவிந்து விடுகின்றனர். எப்படியாவது டிக்கெட் வாங்கி விட வேண்டும் என மணிக்கணக்கில் காத்திருப்பவர்களுக்கு பல நேரங்களில் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. போலீசார் தடியடி, ரசிகர்கள் போராட்டம் என அந்த இடமே கலவர பூமியாக மாறி விடுகிறது. இப்படியான நிலையில் இன்றைய போட்டிக்கான டிக்கெட் விற்பனையின் போது பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது, ரூ.1500, 2 ஆயிரம், 2,500, 3 ஆயிரம், 5 ஆயிரம் என பல வகைகளில் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.