RR vs RCB: நீண்ட நாள் காத்திருப்பு நிறைவேற போகும் நாள்... டூபிளசிஸ்-விராட் கோலி ஒப்பனிங் பார்ட்னர்ஷிப் இன்று... !
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டூபிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வந்த அனுஜ் ராவத் இன்றைய போட்டியில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் இன்றைய போட்டியில் ஆர்சிபி அணியின் புதிய தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் டூபிளசிஸ் களமிறங்க உள்ளனர். இதை ஆர்சிபி கேப்டன் டூபிளசிஸ் டாஸ் போடும் போது உறுதி செய்துள்ளார். இதன்காரணமாக ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஃபார்ம் இழந்து தவிக்கும் விராட் கோலிக்கு இந்த தொடக்க ஆட்டக்காரர் இடம் நல்ல உத்வேகத்தை தரும் என்று கருதப்படுகிறது.
Virat Kohli to open the batting with Faf! 🥳🥳🥳🥳#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #RCBvRR
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 26, 2022
நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி மிகவும் மோசமான ஃபார்மில் உள்ளார். அவர் 8 போட்டிகளில் விளையாடி வெறும் 119 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அத்துடன் இரண்டு முறை கோல்டன் டக் அவுட்டாகி உள்ளார். விராட் கோலி தற்போது வரை 100 கிரிக்கெட் போட்டிகளில் சதம் எதுவும் அடிக்காமல் விளையாடியுள்ளார். அதாவது அவர் கடைசியாக சர்வதேச சதம் அடித்த பிறகு சுமார் 17 டெஸ்ட், 21 ஒருநாள்,25 டி20 மற்றும் 37 ஐபிஎல் போட்டிகள் என மொத்தமாக 100 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தப் போட்டிகள் எவற்றிலும் அவர் சதம் அடிக்கவில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி சதம் அடித்து சுமார் 900 நாட்களுக்கு மேலாகியுள்ளது.
ஆகவே இன்றைய ஐபிஎல் போட்டியில் அவருடைய புதிய இடம் அவருக்கு நல்ல ஃபார்மிற்கு வர ஒத்துழைக்கும் என்று பார்க்கப்படுகிறது. அத்துடன் ஆர்சிபி ரசிகர்கள் இத்தனை நாட்கள் பார்க்க காத்திருந்த கோலி-டூபிளசிஸ் தொடக்க கூட்டணி இன்று நிறைவேற உள்ளது அவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்