KKR vs MI, Match Highlights: பொறுமையுடன் ஆடிய வெங்கடேஷ்... வான வேடிக்கைக் காட்டிய கம்மின்ஸ்.. கொல்கத்தா அசத்தல் வெற்றி!
KKR vs MI, Match Highlights: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரோகித் சர்மா தலைமையிலான 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் இன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று மோதியது. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இரு வீரர்களும் ரன் எடுக்க திணற, சிறப்பாக பந்து வீசி உமேஷ் யாதவ் முதல் ஓவரில் 1 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். தொடர்ந்து கேப்டன் ரோஹித் அதிரடியை வெளிபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உமேஷ் யாதவ் வீசிய 3 வது ஓவரில் கேப்டன் ரோஹித் ஷர்மா 12 பந்துகளில் 3 ரன் எடுத்து விக்கெட் கீப்பர் பில்லிங்ஸிடம் அவுட் ஆனார்.
அவரைதொடர்ந்து, களமிறங்கிய ப்ரீவிஸ் 29 ரன்களும் , இஷான் கிஷன் 14 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர். அதன்பிறகு, மைதானத்திற்குள் வந்த சூர்யாகுமார் யாதவும், திலக் வர்மாவும் மும்பை அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் கடைசி ஓவரில் 5 பந்துகள் மிச்சம் இருக்க 52 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய பொல்லார்ட் தன் பங்குக்கு மூன்று சிக்ஸர், ஒரு பௌண்டரி விரட்ட, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. திலக் வர்மா 38 ரன்களுடனும், பொல்லார்ட் 22 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.
162 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கினர். அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 11 பந்துகளில் 7 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். தொடர்ந்து அடுத்து வந்த பில்லிங்ஸ், ராணா, ரசல் அவுட்டாகி நடையைக்கட்ட, மறுபுறம் நங்கூரமாய் நின்ற வெங்கடேஷ் ஐயர் 41 பந்துகளில் 50 ரன்களை கடந்து நம்பிக்கை அளித்தார்.
பின்னால் வந்த கம்மின்ஸ் பும்ரா வீசிய 15 ஓவரில் தலா, ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் விரட்ட, கொல்கத்தா அணிக்கு 30 பந்துகளில் 35 ரன்கள் தேவையாக இருந்தது. தொடர்ந்து, சாம்ஸ் வீசிய அடுத்த ஓவரில் 4 சிக்ஸர், 2 பௌண்டரியை பறக்கவிட்டு 14 பந்துகளில் அரைசதத்தை கடந்து கொல்கத்தா அணியை வெற்றி பெற செய்தார்.
இதன்மூலம் கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி 1 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. மும்பை அணியை பொறுத்தவரை 3 போட்டிகளில் விளையாடி 3 லிலும் தோல்வி அடைந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்