DC vs PBKS: வார்னர்- பிருத்வி அதிரடியில் படுத் தோல்வி அடைந்த பஞ்சாப்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி !
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி பஞ்சாப் அணியின் ரன் வேகத்தை கட்டுபடுத்தினர். இதன்காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 115 ரன்களுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இதைத் தொடர்ந்து 116 ரன்கள் என்ற எளிய இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பிருத்வி ஷா சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். குறிப்பாக இருவரும் சேர்ந்து 21 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தனர். முதல் 4 ஓவர்களில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்தது.
🔝 bowling effort ✅
— Delhi Capitals (@DelhiCapitals) April 20, 2022
🔥 chase ✅
Simply clinical stuff from the DC boys as we registered the biggest win in the history of the IPL in terms of balls to spare in a chase of 100+ runs 💙#YehHaiNayiDilli | #IPL2022 | #DCvPBKS | #TATAIPL | #IPL | #DelhiCapitals pic.twitter.com/N8DVhgqdoM
அதன்பின்னர் அதிரடி காட்டி வந்த பிருத்வி ஷா 20 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வந்த டேவிட் வார்னர் 30 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உதவியுடன் 60 ரன்கள் விளாசினார். டெல்லி அணி 10.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் அதிகமாக பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் 100க்கு மேலான இலக்கை எட்டியை அணி என்ற பெருமையை டெல்லி அணி பெற்றுள்ளது. இதற்கு முன்பாக 2008ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணி 155 ரன்கள் என்ற இலக்கை 48 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் எட்டியிருந்தது. அந்தச் சாதனையை தற்போது டெல்லி முறியடித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்