கரண்ட் பில்லை விட ஸ்பீடா இருக்கான்... ரேஷன் அரிசியை விட ஹாடா இருக்கான்... யாருப்பா இந்த உம்ரான் மாலிக்!
பெங்களூரு அணிக்காக எதிரான போட்டியில் களமிறங்கிய உம்ரான் மாலிக், 153 கிமீ வேகத்தில் பந்துவீசி இந்த சீசனில் அதிவேகமாக பந்துவீசிய பெளலரானார் உம்ரான் மாலிக்.
கொரோனா பாதிப்பு காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் தமிழ்நாடு வீரர் நடராஜன். அவருக்கு பதிலாக காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக்கை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்தது. தனது அறிமுக போட்டியிலேயே 150 கிமீ வேகத்தில் பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அதனை அடுத்து, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தனது வேகத்தை வெளிப்படுத்த, உம்ரான் மாலிக்கிற்கு ஒரு விக்கெட்டும் விழுந்தது. மிடில் ஓவர்களில் பெங்களூருவுக்கு நெருக்கடி தந்தது உம்ரான் மாலிக்கின் வேகம் - இது சாத்தியமானது எப்படி?
ஜம்மு காஷ்மீரில் இருந்து ஐபிஎல் விளையாடும் நான்காவது வீரரானார் உம்ரான் மாலிக். 2020-21 சையத் முஸ்தாக் அலி கோப்பையில் ஜம்மு காஷ்மீர் அணிக்காக அறிமுகமான அவர், ஐபிஎல் தொடரிலும் தடம் பதித்துள்ளார். இளம் வீரரான உம்ரான் மாலிக், ஹைதரபாத் அணியின் நெட் பெளலராக இருந்து ஐபிஎல் தொடரில் இப்போது அறிமுகமாகி உள்ளார். ஹைதராபாத் அணிக்காக மற்றுமொரு காஷ்மீர் வீரரான அப்துல் சமாத் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களாக ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக பணியாற்றிய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதானின் கண்டுபிடிப்புதான் உம்ரான் மாலிக்கும், அப்துல் சமாத்தும்.
உம்ரான் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
கடந்த அக்டோபர் 3-ம் தேதி துபாயில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், அந்த அணிக்காக விளையாடிய உம்ரான் மாலிக் கவனிக்க வைத்தார். 21 வயதேயான காஷ்மீரைச் சேர்ந்த இந்த வேகப்புயலுக்கு ஐபிஎல் தொடரின் அறிமுக போட்டி அது.
Only one Indian in Top 10 - Umran Malik. pic.twitter.com/VUjzAsDy3x
— Johns. (@CricCrazyJohns) October 3, 2021
அந்த போட்டியில், புவனேஷ்வர் குமார், ரஷித் கான், ஜேசன் ஹோல்டர், சித்தார்த் கவுல் என நட்சத்திர பெளலர்களுக்கு மத்தியில் களமிறங்கிய உம்ரான் மாலிக், 150 கி.மீ வேகத்தில் பந்துவீசினார். இதனால், ஐபிஎல் தொடரில் 150 கி,மீ+ வேகத்தில் பந்துவீசிய டாப் 10 பந்துவீச்சாளர்களின் பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய கிரிக்கெட்ட என பெயரைப் பதிவு செய்தார் உம்ரான் மாலிக்.
உம்ரான் vs ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
அதனை தொடர்ந்து, பெங்களூரு அணிக்காக எதிரான போட்டியில் களமிறங்கிய உம்ரான் மாலிக், 153 கிமீ வேகத்தில் பந்துவீசி இந்த சீசனில் அதிவேகமாக பந்துவீசிய பெளலரானார் உம்ரான் மாலிக். இரண்டாவது இன்னிங்ஸின் 9வது ஓவரை வீசிய அவர், இந்த வேகத்தை பதிவு செய்தார். ஸ்ட்ரைக்கிங் எண்டில் இருந்த படிக்கல் பந்தை தட்டிவிட்டு 1 ரன் எடுத்தார்.
A moment to cherish for @SunRisers' young speedster Umran Malik 😊 👍#VIVOIPL | #RCBvSRH | @RCBTweets pic.twitter.com/oDmXWpf2d0
— IndianPremierLeague (@IPL) October 6, 2021
நார்ஜே, ஃபெர்குசன், ரபாடா என நட்சத்திர வேகப்புயல்களுக்கு மத்தியில் உம்ரான் மாலிக் இந்த சீசனில் மிகவேகமாக பந்துவீசி ரெக்கார்டை பதிவு செய்துள்ளார். உம்ரான் மாலிக்கின் வேகம் குறித்து கமெண்ட் செய்த விராட் கோலி, “இளம் வீரர் ஒருவர் 150 கிமீ வேகத்தில் பந்துவீசுவதை பார்க்க மகிழ்ச்சி அளிக்கிறது. திறமையானவர்கள் விளையாடும் போது, மற்றவர்களின் கவனத்தை பெறுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.