KKR vs RCB, 1 Innings Highlight: சுனில் சுழலில் சிக்கிய கோலி படை : காப்பாற்றுவார்களா பெங்களூர் பவுலர்கள்?
KKR vs RCB, 1 Innings Highlight: கொல்கத்தா அணிக்கு எதிராக பெங்களூர் அணி போராடி 138 ரன்களை எடுத்துள்ளது. சுனில் நரைன் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் ஷார்ஜா மைதானத்தில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் பெங்களூர் கேப்டன் விராட்கோலி வெற்றி பெற்று பேட்டிங்கை தேர்வு செய்தார். கொல்கத்தா அணிக்காக முதல் ஓவரை ஷகிப் அல் ஹசன் வீசினார்.
ஆட்டத்தை தொடங்கிய விராட்கோலியும், தேவ்தத் படிக்கல்லும் நிதானமாக ஆடினாலும் பந்துகளை டாட் செய்யக்கூடாது என்று அனைத்து பந்துகளிலும் ரன்களை சேர்த்தனர். பெர்குசன் பந்தில் 18 பந்தில் 21 ரன்கள் எடுத்திருந்த தேவ்தத் படிக்கல் போல்டாகி வெளியேறினார். அவர் ஆட்டமிழந்த பிறகு பெங்களூர் அணியின் ரன்ரேட் குறையத் தொடங்கியது.
கடந்த போட்டியில் அரைசதம் அடித்த கே.எஸ்.பரத் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். 6வது ஓவரில் 50 ரன்களை கடந்த பெங்களூர் அணி 10 ஓவர் முடிவில் 70 ரன்களை மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் பெர்குசன் பந்தில் மேக்ஸ்வேலுக்கு எல்.பி.டபுள்யூ அப்பீல் செய்தனர். ஆனால், கள நடுவர் அவுட் தரவில்லை. கொல்கத்தா அணியும் அப்பீல் செய்யவில்லை. ஆனால், டிவி ரிப்ளேயில் அது அவுட் என்று தெரியவந்தது. ஆனால், சுனில் நரைன் வீசிய 13வது ஓவரில் கேப்டன் விராட் கோலி 33 பந்தில் 39 ரன்கள் எடுத்த நிலையில் போல்டாகினார்.
இதையடுத்து, ஜோடி சேர்ந்த டிவிலியர்ஸ்- மேக்ஸ்வெல் ஜோடி துரிதமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினார். இதனால், 14வது ஓவரில் பெங்களூர் அணி 100 ரன்களை கடந்தது. ஆனால், சுனில் நரைன் தொடர்ந்து தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் டேஞ்சர் ப்ளேயர் டிவிலியர்சையும் போல்டாக்கினார். பெங்களூர் அணி 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பெங்களூர் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த கிளன் மேக்ஸ்வெலும் சுனில் நரைன் பந்தில் பெர்குசனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால், கடைசி ஓவர்களில் பெங்களூர் அணியின் ரன்வேகம் தடுமாறியது. அதிரடியாக ஆட முயன்ற ஷாபாஸ் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். பெங்களூர் அணி கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தனர். பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 139 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 21 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஷகிப் அல் ஹசன் சிறப்பாக பந்துவீசினர்.