SRH vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்று மோதல்: ஆதிக்கத்தை தொடருமா சென்னை...?
ஷார்ஜா மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று இரவு நேருக்கு நேர் மோத உள்ளன.
ஐ.பி.எல். தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை அணியும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த தொடரில் அசுர பலத்துடன் உள்ள சென்னை அணியை ஹைதராபாத் அணி எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பதே ஹைதராபாத் அணி ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
ஐ.பி.எல். வரலாற்றைப் பொறுத்தவரை இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் விளையாடியுள்ளன. அவற்றில் 4 போட்டிகளில் மட்டுமே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்று போட்டி நடைபெற உள்ள ஷார்ஜா மைதானத்தில் இரு அணிகளும் ஒரு போட்டியில் மட்டும் நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த போட்டியில் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற கடைசி 5 போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 போட்டியிலும், சென்னை அணி 3 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் அணி 2 முறை முதலில் பேட்டிங் செய்தும், 2 முறை இரண்டாவது பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி 5 முறை முதலில் பேட்டிங் செய்தும், 7 முறை இரண்டாவது முறை பேட்டிங் செய்தும் வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இதுவரை நடைபெற்ற போட்டியில் சென்னை அணி சார்பில் ஒரு போட்டியில் தனிநபர் அதிகபட்சமாக 117 ரன்களை குவித்துள்ளார், ஹைதராபாத் அணி சார்பில் தனிநபர் அதிகபட்சமாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் 90 ரன்களை குவித்துள்ளார். சென்னை அணிக்கு எதிராக ஹைதராபாத் அணிக்காக டேவிட் வார்னர் 405 ரன்களை எடுத்துள்ளார். சென்னை அணி சார்பில் ஹைதராபாத் அணிக்கு எதிராக சுரேஷ் ரெய்னா 432 ரன்களை எடுத்துள்ளார்.
சென்னை அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக ரஷீத்கான் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை அணி சார்பில் ட்வெயின் ப்ராவோ அதிகபட்சமாக 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஒரு போட்டியில் சிறந்த பந்துவீச்சாக ஹைதராபாத் அணி சார்பில் அமித் மிஸ்ரா 26 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சென்னை அணி சார்பில் தீபக் சாஹர் 15 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஹைதராபாத் அணிக்கு எதிராக சென்னை அணி தனது அதிகபட்ச ஸ்கோராக 192 ரன்களை பதிவு செய்துள்ளது. குறைந்தபட்ச ஸ்கோராக 137 ரன்களை எடுத்துள்ளது. சென்னை அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி தனது அதிகபட்ச ஸ்கோராக 223 ரன்களை குவித்துள்ளது. குறைந்தபட்ச ஸ்கோராக 132 ரன்களை ஹைதராபாத் பதிவு செய்துள்ளது.