2012 VS 2021 IPL FINAL : சென்னை vs கொல்கத்தா அன்றும், இன்றும் : களமிறங்கப்போவது யார்? யார்?
2012ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியிலும், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியிலும் இரு அணிகளிலும் முக்கிய வீரர்களாக முன்னணி வீரர்கள் களமிறங்க உள்ளனர்.
ஐ.பி.எல். தொடரின் 2021ம் ஆண்டிற்கான இறுதிப்போட்டி இன்று துபாயில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையும், கொல்கத்தாவும் ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதுகின்றன.
2012ம் ஆண்டு சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி ஓவரில் இரண்டு பந்துகள் மீதம் வைத்து வெற்றிக்கான ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், இறுதிப்போட்டியில் அடைந்த அந்த தோல்விக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அணி இன்று பழிதீர்க்கும் என்று சென்னை ரசிகர்கள் பெரிதும் நம்புகின்றனர்.
2012ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய பிரதான வீரர்களே இன்றைய இறுதிப்போட்டியிலும் களமிறங்குகின்றனர். 2012ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களாக மைக் ஹஸ்ஸி, முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, தோனி, ப்ராவோ, ஜடேஜா, அஸ்வின், மோர்கல் முக்கிய வீரர்களாக களமிறங்கினர்.
இன்று துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை அணிக்காக அன்று களமிறங்கிய தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, ப்ராவோ இன்றும் முக்கிய வீரர்களாக களமிறங்க உள்ளனர். இவர்களுடன் பாப் டுப்ளிசிஸ், ருதுராஜ். ராபின் உத்தப்பா, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் களமிறங்க உள்ளனர்.
கொல்கத்தா அணிக்காக 2012ம் ஆண்டு முக்கிய வீரர்களாக கவுதம் கம்பீர், மன்வீந்தர் பிஸ்லா, ஜேக் காலீஸ், யூசுப் பதான், ஷகிப் அல் ஹசன், மனோஜ் திவாரி, சுனில் நரைன், பிரட் லீ களமிறங்கினர். இன்றைய போட்டியில் அன்று விளையாடிய அணியில் இடம்பெற்ற சுனில் நரைன் மற்றும் ஷகிப் அல் ஹசன் இருவர் மட்டுமே களமிறங்க உள்ளனர்.
சென்னை அணிக்கு அன்றும் மகேந்திர சிங் தோனியே கேப்டனாக பொறுப்பு வகித்தார். சி.எஸ்.கே. அணிக்கு இன்றும் மகேந்திர சிங் தோனியே கேப்டனாக களமிறங்க உள்ளார். கொல்கத்தா அணிக்கு அன்று கவுதம் கம்பீர் கேப்டனாக பொறுப்பு வகித்தார். இன்று இயான் மோர்கன் கேப்டனாக பொறுப்பு வகிக்கிறார்.
கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை. இதனால், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அவர் ஆடுவாரா? இல்லையா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சென்னை ரசிகர்களால் தோனிக்கு பிறகு அளவுக்கதிகமாக நேசிக்கப்படும் வீரர் சுரேஷ் ரெய்னா என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்