India T20 World Cup 2024 Squad: ரோஹித் முதல் அர்ஷ்தீப் வரை உலகக் கோப்பை அறிவிப்புக்கு பின், ஐபிஎல்லில் வீரர்களின் செயல்பாடுகள் எப்படி...?
கடந்த ஏப்ரல் 30ம் தேதி உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்புக்கு பிறகு, அணியில் இடம் பிடித்த வீரர்களின் செயல்பாடுகள் எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சமீபத்தில் டி20 உலகக் கோப்பை 2024க்கான இந்திய அணியை அறிவித்தது. இந்த 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்ட பின்னர், இந்த வீரரை அணியில் சேர்த்திருக்கலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் கருத்துகளை முன்வைத்து வருகின்றன.
இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 30ம் தேதி உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்புக்கு பிறகு, அணியில் இடம் பிடித்த வீரர்களின் செயல்பாடுகள் எப்படி என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரோஹித் சர்மா (MI) (இந்திய அணியின் கேப்டன்) - இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இதுவரை ஐபிஎல் 2024ல் 10 போட்டிகளில் 314 ரன்கள் அடித்துள்ளார். இருப்பினும், உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவித்த நாளில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது. அந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித் சர்மா, 5 பந்துகளை மட்டுமே சந்தித்து வெறும் 4 ரன்களை எடுத்தார். இந்தநிலையில், இன்றைய கொல்கத்தா அணிக்கு எதிராக ரோஹித் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஹர்திக் பாண்டியா (MI கேப்டன்) ( இந்திய அணியின் துணை கேப்டன்) - ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸின் கேப்டனாக இருந்தாலும், அவருக்கு இந்த சீசன் சிறப்பானதாக அமையவில்லை. ஐபிஎல் 2024ல் இதுவரை 10 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர், 21.88 சராசரியில் 197 ரன்கள் எடுத்துள்ளார். இந்த இன்னிங்ஸில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 150.38 ஆக இருந்தது. மேலும், 6 விக்கெட்களை மட்டுமே எடுத்துள்ளார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (RR) - ஐபிஎல் 2024ல் யஷஸ்வி ஜெய்ஸ்வால், தொடக்கத்தில் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம், தனது பார்மை மீட்டெடுத்துள்ளார். நேற்றைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் கூட, ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் 67 ரன்களை குவித்திருந்தார். ஒட்டுமொத்தமாக, இவர் இதுவரை 10 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் உள்பட 316 ரன்கள் எடுத்துள்ளார்.
விராட் கோலி (RCB) - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஒரே நம்பிக்கை தூண் விராட் கோலி மட்டும்தான். கிட்டதட்ட அனைத்து போட்டிகளிலும் தன்னால் முடிந்த அளவு ரன்னை குவித்து எதிரணிக்கு பயம் காட்டி வருகிறார். ஐபிஎல் 2024ல் கோலி இதுவரை 10 இன்னிங்ஸ்களில் 71.42 சராசரியுடன் 147.49 ஸ்ட்ரைக் ரேட்டில் 500 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில் சதம் மற்றும் நான்கு அரைசதங்கள் அடித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் (MI) - ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா அறுவை சிகிச்சையில் இருந்து மீண்ட பிறகு, தேசிய கிரிக்கெட் அகாடமியின் (என்சிஏ) உடற்தகுதி அனுமதி வழங்கப்படாததால், மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிக்காக சூர்யகுமார் யாதவ் சீசனின் முதல் சில போட்டிகளில் விளையாடவில்லை. ஐபிஎல் 2024ல் இதுவரை 7 இன்னிங்ஸ்களில் இரண்டு அரைசதம் உள்பட 176 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கூட வெறும் 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பண்ட் (DC) - டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், விபத்தில் இருந்து மீண்டு வந்து இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார். இதுவரை இந்த சீசனில் 11 இன்னிங்ஸில் 44.22 சராசரி மற்றும் 158.56 ஸ்ட்ரைக் ரேட்டில் 398 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் 2024ல் பந்த் இதுவரை 3 அரைசதங்கள் அடித்துள்ளார்.
சஞ்சு சாம்சன் (RR) - ஐபிஎல் 2024 இல் இதுவரை 10 இன்னிங்ஸ்களில் இருந்து 77.00 சராசரி மற்றும் 161.08 ஸ்ட்ரைக் ரேட்டில் 385 ரன்களுடன் இந்தியாவின் T20 உலகக் கோப்பை 2024 அணியில் சஞ்சு சாம்சன் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். இவரது தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் 2024ல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் நேற்றைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 3 பந்துகளை சந்தித்து டக் அவுட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிவம் துபே (CSK) - ஹர்திக் பாண்டியாவை தொடர்ந்து, மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் துபே இந்திய உலகக் கோப்பை அணியில் தேர்வாகியுள்ளார். வர் 10 இன்னிங்ஸ்களில் 50.00 சராசரியிலும் 171.56 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 350 ரன்கள் எடுத்துள்ளார். இந்த சீசனில் ஏற்கனவே 3 அரைசதங்கள் அடித்துள்ளார். ஆனால், உலகக் கோப்பை அறிவிப்புக்கு பின், ஷிவம் துபே பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடினார். அதில், ரன் எதுவும் எடுக்காமல் முதல் பந்திலேயே அவுட்டானார்.
ரவீந்திர ஜடேஜா (CSK) - ரவீந்திர ஜடேஜாவைப் பொறுத்த வரையில், அவர் இதுவரை பேட் மூலம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் 7 இன்னிங்ஸிலிருந்து 19 சராசரியிலும் 164.19 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 133 ரன்களை மட்டுமே குவித்துள்ளார். பந்திலும், ஜடேஜா 10 இன்னிங்ஸ்களில் இருந்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
அக்சர் படேல் (DC) - அக்சர் படேல் ஐபிஎல் 2024ல் இதுவரை 9 இன்னிங்ஸ்களில் 24.83 சராசரி மற்றும் 124.16 ஸ்ட்ரைக் ரேட்டில் ஒரு அரைசதம் உள்பட 149 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், பந்துவீச்சில் அக்சர் படேல், 11 இன்னிங்ஸ்களில் 29.77 சராசரி மற்றும் 7.24 என்ற எகானமி ரேட்டில் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
குல்தீப் யாதவ் (DC) - ஐபிஎல் 2024ல் குல்தீப் யாதவ் இதுவரை 8 இன்னிங்ஸ்களில் இருந்து 12 விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல ஃபார்மிலும் உள்ளார். அவ்வபோது, டெல்லி அணிக்காக தேவையான ரன்களையும் வழங்கி வருகிறார்.
யுஸ்வேந்திர சாஹல் (RR) - ஐபிஎல் 2024 இல் இதுவரை 9 இன்னிங்ஸ்களில் இருந்து 23.53 சராசரி மற்றும் 9.00 என்ற பொருளாதாரத்தில் 13 விக்கெட்டுகளை சாஹல் எடுத்துள்ளார். கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறாத சாஹல், இந்த 2024 டி20 உலகக் கோப்பையில் இடம்பெற்றிருப்பது இவர் மீது அதிக எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது.
ஜஸ்பிரித் பும்ரா (MI) - ஐபிஎல் 2024ல் பும்ரா இதுவரை 10 இன்னிங்ஸ்களில் 18.28 சராசரி மற்றும் 6.40 என்ற பொருளாதாரத்தில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட வீரர்களில், ஐபிஎல்லில் இவரது பங்களிப்பு மட்டுமே சற்று ஆறுதலாக உள்ளது.
முகமது சிராஜ் (RCB) - முகமது சிராஜ் ஐபிஎல் 2024ல் இதுவரை பெரிதான தாக்கத்தை எதையும் ஏற்படுத்தவில்லை. ஆனால், எப்படி 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றார் என்பது கேள்விகுறியாக உள்ளது. இதுவரை இவர் 9 இன்னிங்ஸ்களில் இருந்து 6 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார்.
அர்ஷ்தீப் சிங் (PBKS) - இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஐபிஎல் 2024 இல் 10 இன்னிங்ஸ்களில் 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பின், இவர் சென்னை அணிக்கு எதிராக களமிறங்கினார். அன்றைய போட்டியில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களை வீசி 1 விக்கெட்டுடன் 52 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் இவரது எகானமி 10.01 என்பது கவலைக்குரியதாக இருக்கிறது.