IPL Hardik: ஐபிஎல் 2024 தொடரிலிருந்து விலகுகிறார் ஹர்திக் பாண்ட்யா? மும்பை அணிக்கு மீண்டும் கேப்டனாவாரா ரோகித் சர்மா?
IPL 2024 Hardik: அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன், ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
IPL 2024 Hardik: ஹர்திக் பாண்ட்யா கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு வர கூடுதல் அவகாசம் தேவைப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் 2024ல் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகல்?
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்ட்யா, தொடரிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கணுக்கால் காயம் காரணமாக அவர் தொடர் முழுவதும் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. ஒருவேளை இது உறுதியானால், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில், சூர்யகுமார் யாதவ் அல்லது ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பதவியை வகிக்கமாட்டார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை அணிக்கு வந்த பாண்ட்யா:
மும்பை இந்தியன்ஸ் வாயிலாக ஐபிஎல் தொடருக்கு அறிமுகமான ஹர்திக் பாண்ட்யா, காலப்போக்கில் அணியின் தவிர்க்க முடியாத ஆல்-ரவுண்டராக உருவெடுத்தார். பல போட்டிகளில் ஒற்றை ஆளாக அணியின் வெற்றிக்காகவும் வித்திட்டுள்ளார். இந்த சூழலில் தான் கடந்த 2022ம் ஆண்டு அவர் மும்பை அணியால் விடுவிக்கப்பட்டு, குஜராத் அணியுடன் ஒப்பந்தமானார். அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், முதல் சீசனிலேயே கோப்பையை வென்றதோடு, கடந்த சீசனிலும் இறுதிப்போட்டி வரை அணியை வழிநடத்தினார். இந்நிலையில் தான் டிரேட் அடிப்படையில், குஜராத் அணியில் இருந்து மீண்டும் அவர் மும்பை அணிக்கு திரும்பினார். 2024ம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து மும்பை அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தான், காயம் காரணமாக அடுத்த சீசன் முழுவதும் ஹர்திக் பாண்ட்யா விளையாட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்திக் பாண்ட்யா காயம்:
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை போட்டியிலிருந்து, ஹர்திக் பாண்ட்யா பாதியிலேயே வெளியேறினார். தொடர்ந்து, காயத்திற்கு சிகிச்சை பெற்று மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். இதன் காரணமாக அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரில் கூட அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் தான், ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரிலும் ஹர்திக் பாண்ட்யா விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, ஐபிஎல் தொடருக்கு முன்பாக அவர் காயத்திலிருந்து மீண்டு, முழு உடற்தகுதியை பெறுவாரா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்திய அணிக்கு சிக்கல்:
காயத்தில் இருந்து மீண்டு ஹர்திக் பாண்ட்யா எப்போது சர்வதேச போட்டிக்கு திரும்புவார் என்பதில் தற்போது வரை எந்த தெளிவும் இல்லை. இந்த நிலையில் அவரது கேப்டன் பொறுப்பை வகித்து வந்த சூர்யகுமார் யாதவும், காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார். 2024ம் ஆண்டு ஜுன் மாதத்தில் டி-20 உலகக் கோப்பை நடைபெற உள்ள, முக்கிய வீரர்கள் காயமடைந்து இருப்பது இந்திய அணி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு, ரோகித் மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே இந்திய டி-20 அணியில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.