CSK vs DC 1st Innings Highlights: ‘ஒருத்தர் கூட பெருசா ரன் அடிக்கல’ .. ஆனாலும் கெத்து காட்டிய சென்னை.. டெல்லி அணிக்கு 168 ரன்கள் இலக்கு..!
CSK vs DC IPL 2023: ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது.
16வது ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த சீசனில் இரு அணிகளும் மோதும் முதல் போட்டி இதுவாகும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் ருத்ராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே நிதானமாகவே ஆட்டத்தை தொடங்கினார்கள். அணியின் ஸ்கோர் 4.1 ஓவர்களில் 32 ரன்களை எட்டியபோது டெவன் கான்வே, டெல்லி வீரர் அக்ஸர் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். தொடர்ந்து அக்ஸர் படேல் தனது அடுத்த ஓவரில் 24 ரன்களில் ருத்ராஜ் கெய்க்வாட் விக்கெட்டை கைப்பற்றினார். இதனால் சென்னை அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது.
இதன்பின்னர் சுழற்பந்து வீச்சாளர்களை டெல்லி கேப்டன் வார்னர் பயன்படுத்த தொடங்க அதற்கு நல்ல பலன் கிடைத்தது. அதன்படி குல்தீப் யாதவ் பந்துவீச்சில் மொயீன் அலி 7 ரன்களிலும், ரஹானே 21 ரன்களில் லலித் யாதவ் பந்திலும் அவுட்டாக சென்னை அணி 77 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தனது சிக்ஸர்களால் ரசிகர்களை மகிழ்வித்த இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ஷிவம் துபே 25 ரன்களில் மிட்செல் மார்ஸ் பந்து வீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதன்பின்னர் அம்பத்தி ராயுடு 23 ரன்களில் கலீல் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 16.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களாக இருந்தது. இதன்பின்னர் சென்னை அணி 150 ரன்களை தாண்டுமா என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்தது. ஆனால் கேப்டன் தோனி - ஜடேஜா ஜோடி நிதானமாக ரன்களை சேர்க்க சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது.
கேப்டன் தோனி 20 ரன்களும், ஜடேஜா 21 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் மிட்செல் மார்ஷ் 3 விக்கெட்டுகளையும், அக்ஸர் படேல் 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, லலித் யாதவ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து டெல்லி அணி 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.