Natarajan: ஐ.பி.எல்லில் அசத்தும் நடராஜன்: டி20 உலகக் கோப்பை அணியில் மறுபரிசீலனை செய்யுமா பிசிசிஐ? விரிவான அலசல்!
இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது நடராஜன், சன்ரைசர்ஸ் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
டி20 உலகக் கோப்பை 2024:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை ஒருநாள் போட்டியில் இறுதிவரை சென்ற இந்திய அணி கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்தது. தொடர் ஆரம்பம் ஆனதில் இருந்து நடைபெற்ற போட்டிகளில் எல்லாம் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது ரசிகர்களின் நெஞ்சில் ஆறாத தழும்பாய் இடம் பெற்றது. அந்த தொடரின் போது தமிழகத்தில் இருந்து முதல் 15 வீரர்களில் ஒரு வீரரை கூட பிசிசிஐ தேர்வு செய்யாதது தமிழக ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.
பின்னர் அக்ஸர் படேலுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த ஆப் ஸ்பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் சேர்த்தது பிசிசிஐ. ஆனாலும் கூட அஸ்வின் சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் மட்டுமே பயன்படுத்தியது இந்திய அணி. இந்தநிலையில் தான் தற்போது ஐ.பி.எல் சீசன் 17 நடைபெற்று வருகிறது.
ஒரு புறம் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற்றாலும் மறுபுறம் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருப்பது என்னவோ டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்காகத்தான். அதிலும் குறிப்பாக இந்திய அணியில் இந்த முறை எந்ததெந்த வீரர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்பதும் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்தது. இச்சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிசிசிஐ 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி தொடர்பான விவரங்களை வெளியிட்டது. இதில் தமிழக ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு பேரதிர்ச்சியாக அமைந்தது என்றால் டி20 உலகக் கோப்பையில் ஒரு தமிழக வீரர் கூட இடம் பெறவில்லை என்பது தான்.
நடராஜனுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்கள்:
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் நடப்பு ஐ.பி.எல் சீசனில் சிறப்பாக விளையாடி வரும் தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு பிசிசிஐ வாய்ப்பு வழங்காதது மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்கள் மட்டும் இன்றி பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் தங்களது அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்," இந்திய அணியில் நடராஜன் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்திய அணியில் இடம் பிடிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் ஏன் 2 மடங்கு சிறப்பாக விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டியுள்ளது. தனிப்பட்ட முறையில் நானும் இதுபோன்ற சூழலை எதிர்கொண்டிருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
அதேபோல் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா,"இது விரிவாக விவாதிக்கப்படுவது சிறப்பான ஒன்று. தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு அவர்களுக்கான இடத்தைக் கொடுக்காமல் டெல்லி மறுத்துள்ளது. இது சமீப காலமாக அதிக அளவில் நடக்கிறது. இது ஆட்சிக்கெல்லாம் அப்பாற்பட்டது. பல விளையாட்டுகளிலும் டெல்லி இவ்வாறுதான் குறுகிய பார்வையுடன் செயல்படுகிறது. தென் மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த திறன் மிக்க விளையாட்டு வீரர்கள் குறித்து டெல்லி பெரும்பாலான நேரங்களில் பாராமுகமாகவே இருக்கிறது" என்று தன்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்திருந்தார்.
நடிகர் சரத்குமார், "இந்திய அணி அறிவிப்பின்போது எப்போதும் உற்சாகமாக இருக்கும். ஆனால், தமிழ் பெயர்கள் இல்லாதது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. டெத் ஓவர்களில் நடராஜன், துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி எதிரணியை நிலைகுலையச் செய்ததை பார்த்து ரசித்துள்ளேன். டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில், சிறந்த வேகப்பந்து வீச்சாளரும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடராஜன் அவர்களின் பெயர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. வாய்ப்பு இருப்பின் அவரை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் மறுபரிசீலனை செய்யலாம்" என்று இந்திய அணியில் தமிழ்நாட்டு வீரர் ஒருவர் கூட இடம் பெறாதது குறித்த ஏமாற்றத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருந்தனர். முன்னாள் வீரர் ஶ்ரீகாந்த் தான் எடுத்த 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் நடராஜனுக்கு இடம் அளித்து இருந்தார். இது உண்மையாக இருக்க வேண்டும் என்று தான் ரசிகர்களும் விரும்பினார்கள்.
எப்படி விளையாடி இருக்கிறார் நடராஜன்?
இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது நடராஜன், சன்ரைசர்ஸ் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அவர் ஓவருக்கு சராசரியாக 9 ரன்களை விட்டுக் கொடுத்திருந்தார். அதேநேரத்தில், உலகக்கோப்பைக்கான அணியில் தேர்வாகியுள்ள முகமது சிராஜ் 9 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.
ஓவருக்கு சராசரியாக 9.50 என்ற அடிப்படையில் அவர் ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். அணியில் தேர்வாகியுள்ள மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எகானமி ரேட் 9.68 என்ற அடிப்படையில் இருக்கிறது. ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே நடராஜனை விட சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளர் என்று ஐ.பி.எல்.புள்ளி விவரத்தை ஆராய்ந்தால் நமக்கு தெரியவருகிறது. அதாவது அவர் மட்டும் தான் 10 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.
இந்த ஐ.பி.எல் சீசனில் தற்போது வரை 8 லீக் போட்டிகளில் விளையாடி இருக்கும் நடராஜன் 192 பந்துகள் வீசி 287 ரன்களை விட்டுக்கொடுத்து மொத்தம் 15 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதன் மூலம் பர்பிள் தொப்பியையும் தன்வசப்படுத்தியிருக்கிறார். அதோடு டெத் ஓவர்களில் மிகச்சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார். 8 போட்டிகளிலுமே அவர் வீசிய டெத் ஓவர்கள் எதிரணி பேட்டர்களை மிரட்டியது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்படி கிடைக்கும் போட்டிகளில் எல்லாம் தன் திறமையை வெளிப்படுத்தும் நடராஜன் டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இடம் பெறாதது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. அதேநேரம் டி20 உலகக் கோப்பை அணிகளுக்கான வீரர்கள் பட்டியலை இறுதி செய்வதற்கான கடைசி நாளாக மே 26 ஆம் தேதியை ஐசிசி அறிவித்து இருக்கிறது. இச்சூழலில் பிசிசிஐ மறுபரிசீலனை செய்து நடராஜனை அணியில் சேர்க்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டு ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.