IPL: ஐபிஎல் குடும்பம்.. அணியின் அடையாளம், ஒருமுறை கூட விடுவிக்கப்படாத 5 வீரர்கள் - லெஜண்ட்ஸ்னா சும்மாவா?
IPL Retain: ஐபிஎல் போட்டியில் சொந்த அணி நிர்வாகங்களால் ஒருமுறை கூட விடுவிக்கப்படாத, வீரர்களை பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.

IPL Retain: ஐபிஎல் போட்டியில் சொந்த அணி நிர்வாகங்களால் ஒருமுறை கூட விடுவிக்கப்படாத, வீரர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
வீரர்களுக்கான ஐபிஎல் ஏலம்:
ஐபிஎல் 2026 சீசன் வீரர்களுக்கான மினி ஏலம் டிசம்பரில் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பத்து அணிகளின் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளது. தக்கவைப்பு பட்டியல் நவம்பர் 15 அன்று நேரலையில் வெளியிடப்படும். எந்த நட்சத்திர வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்? யார் ஏலத்திற்குள் நுழைவார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். வீரர்களின் அணி மாற்றங்கள் ஐபிஎல் வரலாற்றில் வழக்கமான அம்சமாக இருந்தாலும், ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் அணிகளின் அடையாளங்களாகவே நிலைத்துவிடுகின்றனர். அத்தகையவர்கள் அணிகளால் ஒருபோதும் விடுவிக்கப்பட்டதே இல்லை.
அணி நிர்வாகங்களால் விடுவிக்கப்படாத வீரர்கள்:
சச்சின் டெண்டுல்கர் (மும்பை இந்தியன்ஸ்)
"கிரிக்கெட்டின் கடவுள்" என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 2008 முதல் 2013 வரை மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்காக விளையாடினார். அவரது ஆறு ஆண்டு காலப்பகுதியில் அந்த அணி அவரை ஒருபோதும் ஏலத்திற்காக விடுவிக்கவில்லை. ஓய்வுக்குப் பிறகும், டெண்டுல்கர் மும்பை அணியுடன் ஒரு வழிகாட்டியாக தனது பயணத்தை தொடர்ந்தார். சுவாரஸ்யமாக, அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் மும்பை அணியில் உள்ளார். இருப்பினும் 2026 சீசனுக்கு முன்னதாக அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு வர்த்தகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
2008 ஆம் ஆண்டு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடங்கப்பட்டதிலிருந்து, விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணி அவரை ஒருபோதும் விடுவித்ததில்லை. கோப்பையை வெல்லமுடியாவிட்டாலும், ஒட்டுமொத்த அணியை கலைத்தாலும் கோலி நிலையானவராக இருந்தார். 18 வருட காத்திருப்புக்குப் பிறகு இறுதியாக 2025 இல் கோலி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றார். ஆர்சிபி ரசிகர்களின் 18 வருட எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தார்.
எம்எஸ் தோனி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
2008 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முகமாக எம்.எஸ். தோனி இருந்து வருகிறார், மேலும் அந்த அணி அவரை ஒருபோதும் விடுவிக்கவில்லை. அவரது தலைமையின் கீழ், சிஎஸ்கே அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சிஎஸ்கே அணி இடைநீக்கம் செய்யப்பட்டபோது மட்டுமே மாற்றம் ஏற்பட்டது. அப்போது தோனி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடினார். இதுவும் அணியால் அவர் விடுவிக்கப்பட்டதால் அல்ல, மாறாக சிஎஸ்கே அணி அணி தடை செய்யப்பட்டதால் மட்டுமே ஆகும். தோனி 2026 ஐபிஎல் தொடரில் மீண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளார்.
சுனில் நரைன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் 2012 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் இணைந்தார், அன்றிலிருந்து தற்போது வரை அணிக்காக விசுவாசமாக இருந்து வருகிறார். விக்கெட் வீழ்த்தும் திறமைகள் மற்றும் தொடக்க வீரராக அதிரடியான கேமியோக்களுக்கு பெயர் பெற்ற நரைன், கொல்கத்தா அணியின் வெற்றிப் பயணத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளார். அந்த அணி பல மறுகட்டமைப்புகளுக்கு உட்பட்ட போதிலும், நரைன் ஒருபோதும் விடுவிக்கப்படவில்லை.
ஷேன் வார்ன் (ராஜஸ்தான் ராயல்ஸ்)
2008 ஆம் ஆண்டு தொடக்க ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணி சாம்பியன் பட்டம் வெல்ல வழிவகுத்தவர், ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே ஆவார். 2011 இல் ஓய்வு பெறும் வரை அவர் அணியில் இருந்தார். அவர் விளையாடிய ஆண்டுகளில் ஆர்ஆர் அவரை ஒருபோதும் விடுவிக்கவில்லை. வார்னின் தலைமையே ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தானின் பாரம்பரியத்திற்கு அடித்தளமிட்டது.




















