ABD on Retirement: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கு ஐ.பி.எல்.தான் காரணமா? - டிவிலியர்ஸ் பதில்
ஐ.பி.எல். உள்பட அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றது ஏன்? என்று ஏபி டிவிலியர்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
![ABD on Retirement: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கு ஐ.பி.எல்.தான் காரணமா? - டிவிலியர்ஸ் பதில் ABD opens up on retirement, says IPL 2021 affected his 'enjoyment' of the game ABD on Retirement: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கு ஐ.பி.எல்.தான் காரணமா? - டிவிலியர்ஸ் பதில்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/12/18e01a883ef9037014f5f3bf4e8be576_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐ.பி.எல். தொடர்களில் அணிகளை கடந்து ரசிகர்களை கொண்ட வீரர்கள் வெகு சிலரே. அவர்களில் எப்போதுமே ஏபி டிவிலியர்சுக்கு என்று தனி இடம் உண்டு. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான டிவிலியர்ஸ், நடப்பு தொடரிலும் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்தாண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுவதும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், டிவிலியர்ஸ் தனது ஓய்வுக்கான காரணத்தை பேட்டியாக அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “கிரிக்கெட் எப்போதும் எனக்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. ஐ.பி.எல். தொடரில் எப்போதும் ஆண்டுக்கு இரண்டரை முதல் மூன்று மாதங்கள் அதிலேயே பயணிக்கிறோம். ஐ.பி.எல். தொடரை இரண்டாக பிரித்து நடத்தியபோதும், பயோ பபுள் சூழல் மிகவும் சிக்கலாக்கியது. அப்போது நான் மிகவும் கடினமாக உணர்ந்தேன். குறிப்பாக, கிரிக்கெட்டின் சந்தோசத்தை அது மிகவும் சிக்கலாக்கியது.
நான் மைதானத்தில்தான் இதை கண்டேன். அங்கு ரன்களை அடிப்பதும், அணிக்காக சிறப்பாக செயல்படுவதும், அதனுடன் செல்லும் எல்லாவற்றுடனும் உண்மையில் பொருந்தவில்லை. அங்குதான் எனது சமநிலை தவறத்தொடங்கியது. நான் எப்போதும் விளையாட்டின் மகிழ்ச்சிக்காக விளையாடினேன். அந்த மகிழ்ச்சி கீழே செல்ல ஆரம்பித்த நிமிடம், நான் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய நேரம் என்று தெரிந்து கொண்டேன்.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டிவிலியர்ஸ் குறிப்பிட்டது போலவே, கடந்த ஐ,பி.எல். தொடர் தொடங்கப்பட்டு கொரோனா தொற்றால் பாதியிலே நிறுத்தப்பட்டது. பின்னர், சுமார் மூன்று மாத இடைவேளைக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது. ஐ.பி.எல். தொடரில் பின்பற்றப்படும் பயோ-பபுள் விதிமுறைகள் வீரர்களை மனதளவில் மிகவும் கடுமையாக பாதிப்படையச் செய்கிறது என்று பல வீரர்களும், முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
37 வயதான டிவிலியர்ஸ் இதுவரை 184 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 162 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் 3 சதமும், 40 அரைசதமும் அடங்கும். அதிகபட்சமாக 133 ரன்களை வைத்துள்ள டிவிலியர்ஸ் 40 முறை ஆட்டமிழக்காமலும் இருந்துள்ளார். இதுதவிர தென்னாப்பிரக்க அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 9 ஆயிரத்து 577 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 8 ஆயிரத்து 765 ரன்களும் அடித்துள்ளார்.
மிஸ்டர் 360 டிகிரி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவருக்கு என்று இந்தியாவில் லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். நடப்பு ஐ.பி.எல். நடப்பு தொடரிலும் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நேரத்தில், அவர் ஓய்வை அறிவித்தார். அவரது ஓய்வு முடிவு ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)