Virat Kohli: 4 போட்டிகளில் 3 அரைசதம்… அதிரடி ஃபார்மில் கோலி.. இந்த வருஷம் ஆரஞ்சு கேப் இவருக்குதானா..?
ஜாஸ் பட்லரை கடந்து 4 போட்டிகளில், விராட் கோலி சராசரியாக 71.33 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 147.58 இல் 214 ரன்களுடன் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஷிகர் தவன் 233 ரன்களுடன் உள்ளார்.
சிக்கந்தர் ராசா மற்றும் ஷாருக் கான் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், பஞ்சாப் கிங்ஸ், பலம் வாய்ந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேறி, 4வது இடத்திற்கு வந்துள்ளது. அதே நேரத்தில் விராட் கோலியின் அரை சதத்தால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் டெல்லி கேபிடல்ஸ் அணியை தொடர்ந்து ஐந்தாவது தோல்விக்கு தள்ளி, இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. நேற்றைய இந்த இரு போட்டிகளால் ஆரஞ்சு கேப் மற்றும் பர்பில் கேப் பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆர்சிபி அணி வெற்றி
அறிமுக வேகப்பந்து வீச்சாளர் விஜய்குமார் வைஷாக் 3/20 எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் கடைசி இடத்தில் இருந்த டெல்லியை தோற்கடிக்க உதவினார். பெங்களூரின் 174-6 ரன்களைத் துரத்திய டெல்லி 151-9 என்று வீழ்ந்ததால் ஆர்சிபி வென்றது. இந்த போட்டியில் அற்புதமான அரைசதம் விளாசிய விராட் கோலி, இந்த தொடரின் நான்காவது போட்டியில் மூன்றாவது அரைசத்தை அடித்துள்ளார். கோலி 34 பந்துகளில் 6 பவுண்டரிகள், ஒரு சிக்சர் உட்பட 50 ரன்கள் எடுத்து தனது 47வது ஐபிஎல் அரைசதத்தை அடித்தார், மேலும் சக தொடக்க ஆட்டக்காரர் ஃபாஃப் டு பிளெசிஸுடன் (22) 26 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு மகிபால் லோம்ரோருடன் (26) 33 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார் கோலி.
கோலியின் ஃபார்ம்
விரைவில் அவரிடம் இருந்து சதங்களை காண காத்திருக்கும் ஆர்சிபி ரசிகர்கள், 2016 காலகட்ட விராட் கோலியாக வந்து அவரது சாதனையை அவரே முறியடிப்பார் என்று நம்புகின்றனர். அப்போது அவர் 4 சதங்களுடன் 7 அரை சதங்களுடன் 974 ரன்கள் குவித்து அசைக்கமுடியாத வீரராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போதுள்ள விராட் கோலி அதற்கு சளைத்தவர் இல்லை என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பிலும் தவறில்லை. ஏற்கனவே நான்கு போட்டிகளில் 214 ரன்களை கடந்துவிட்ட அவருக்கு அதனை செய்வது பெரிய காரியமில்லைதான். நான்கு ஓவர்கள் வீசி 2-23 எடுத்த முகமது சிராஜ் பர்பில் கேப் போட்டியில் தன் பெயரை மீண்டும் பதிவு செய்துள்ளார்.
பஞ்சாப் அணி வெற்றி
நேற்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில், கீழ்-வரிசை பேட்டர் ஷாருக் கான் 10 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 23 ரன்கள் எடுத்தார், பிபிகேஎஸ் எல்எஸ்ஜியை மூன்று பந்துகள் மீதமுள்ள நிலையில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணியை வேகப்பந்து வீச்சாளர் யுத்விர் சிங் 3 ஓவர்களில் 2/19 எடுத்து அச்சுறுத்தினர். ஆனால் சிக்கந்தர் ராஸா வந்து காப்பாற்ற, ஐபிஎல் வரலாற்றில் அரைசதம் அடித்த முதல் ஜிம்பாப்வே வீரர் என்ற பெருமையையும், ஆட்டநாயகன் விருது பெற்ற பெருமையையும் தன்வசப்படுத்தினார். ஷிகர் தவான் ஆடாத நிலையிலும் அந்த அணி தளராமல் ஆடி வென்றுள்ளது.
ஆரஞ்சு கேப்
பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் சனிக்கிழமை ஆட்டத்தில் விளையாடாமல் இருந்த போதிலும், அவரது ஆரஞ்சு கேப்பிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. இரண்டாவது இடத்தில் இருந்த டேவிட் வார்னர் 19 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 228 ரன்னோடு நின்றார். இதற்கிடையில், கோலி, பட்லரை கடந்து, நான்கு ஆட்டங்களில் சராசரியாக 71.33 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 147.58 இல் 214 ரன்களுடன் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில் ஷிகர் தவன் 233 ரன்களுடன் உள்ளார். RCB கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் நான்கு போட்டிகளில் 65.67 சராசரி மற்றும் 168.37 ஸ்ட்ரைக் ரேட்டில் 197 ரன்களுடன் ஐந்தாம் இடம் பிடித்தார்.
பர்பிள் கேப்
மார்க் வுட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யுஸ்வேந்திர சாஹலிடம் இருந்து பர்பிள் கேப்பை பறித்துள்ளார். நேற்றைய போட்டியில் வுட் இரண்டு விக்கெட்டுகளை எடுத்ததன்மூலம் இந்த சீசனில் அவர் 11 விக்கெட்டுகள் எடுத்து, முன்னிலை பெற்றுள்ளார். ரவி பிஷ்னோய் இந்த தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளார். நேற்று அவரும் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தி தனது சீசனின் எண்ணிக்கையை எட்டாகக் உயர்த்தினார். சாஹல் 10 விக்கெட்டுகளையும், மூன்றாவது இடத்தில் உள்ள ரஷித் கான் ஒன்பது விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். அர்ஷ்தீப் சிங் எட்டு விக்கெட்டுகளுடன் ஐந்தாம் இடம் பிடித்தார்.