ஐபிஎல் 2021: நடக்குமா 'ஈ சாலா கப் நம்தே'? - அதிரடி மாற்றங்கள் செய்த ஆர்சிபி!
ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இலங்கை ஆல் ரவுண்டர் ஹசரங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மே மாதம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்தத் தொடர் அடுத்த மாதம் 19ஆம் தேதி மீண்டும் தொடங்க உள்ளது. இதற்காக ஐபிஎல் அணிகள் யுஏஇ சென்று பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த இரண்டு நாட்களாக யுஏஇயில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் சில அணிகளும் யுஏஇ செல்ல திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பாவிற்கு பதிலாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்காவை அணியில் சேர்த்துள்ளது. இதுதொடர்பான ஆதிகாரபூர்வ அறிவிப்பை ஆர்சிபி அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இவருடன் சேர்ந்து மேலும் சில வீரர்களை ஆர்சிபி அணி சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி துஷ்மந்தா சாமீரா மற்றும் டிம் டேவிட் ஆகிய இருவரையும் ஆர்சிபி அணியில் சேர்த்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக இருந்த சைமேன் கேட்ச் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மைகே ஹேசன் ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
🔊 ANNOUNCEMENT 🔊@CoachHesson takes over as head coach for the remainder of #IPL2021 after Simon Katich made himself unavailable due to personal reasons. #PlayBold #WeAreChallengers pic.twitter.com/MQ8ErjqMZI
— Royal Challengers Bangalore (@RCBTweets) August 21, 2021
வனிந்து ஹசரங்கா தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்தத் தொடரில் மொத்தம் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அதிலும் குறிப்பாக மூன்றாவது டி20 போட்டியில் 9 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். இவர் பந்துவீச்சில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் அசத்த கூடிய ஒரு ஆல் ரவுண்டராக இருந்து வருகிறார். இவரை அணியில் சேர்த்து பெங்களூரு அணி கூடுதல் பலம் பெற்றுள்ளது. யுஏஇ ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சு சற்று சாதகமாக இருக்கும் என்பதால் ஆர்சிபி இந்த முடிவை எடுத்திருக்கும் என்று கூறப்படுகிறது.
Hasaranga was the Player of the Series in the recently concluded #SLvIND T20I series taking 7 wickets in 3 matches at an economy rate of 5.58.#PlayBold #WeAreChallengers #IPL2021 #NowAChallenger pic.twitter.com/N6eggNkQ0B
— Royal Challengers Bangalore (@RCBTweets) August 21, 2021
ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் ஆர்சிபி அணி 7 போட்டிகளில் 5 வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது பாதியில் ஆர்சிபி அணி தன்னுடைய முதல் போட்டியில் செப்டம்பர் 20ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
மேலும் படிக்க: 'இது என்னடா நமக்கு வந்த சோதனை' - ரசிகரின் சட்டைக்குள் புகுந்த கோல்ஃப் பந்து!