KKR vs CSK, Innings Highlights : மரண பயம் காட்டிய ரஸல், பாட் கமின்ஸ் : 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை த்ரில்லான வெற்றி
கொல்கத்தா அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற பஞ்சாப் – ஹைதராபாத் ஆட்டம் ரசிகர்களுக்கு சப்பென்று இருந்த நிலையில், சென்னை – கொல்கத்தா ஆட்டம் சிவகாசி சரவெடியாக ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா கேப்டன் மோர்கன் சென்னையை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். கடந்த போட்டிகளில் 150 முதல் 170 வரை மட்டுமே சென்னை அணி எடுத்ததால், இந்த முறையும் அதே ஸ்கோரைதான் சென்னை அணி எடுக்கும் என்று சிலர் கருதினர்.
ஆனால், ஆட்டம் தொடங்கியது முதல் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட்டும், பாப் டுப்ளிசிசும் ருத்ரதாண்டவம் ஆடினர். ருதுராஜ் பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்புவதிலே குறியாக இருந்தார். ருதுராஜ் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் குவித்து வெளியேறினார். மொயின் அலியும் 25 ரன்களுக்கு வெளியேற அடுத்து இறங்கிய தல தோனி 2 பவுண்டரி, 1 சிக்ஸர் என்று 17 ரன்களை 8 பந்துகளில் எடுத்தார். ஒற்றை ஆளாக கொல்கத்தா பந்துவீச்சை துவம்சம் செய்த டுப்ளிசிஸ் 95 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், சென்னை அணி20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 220 ரன்களை குவித்தது.
இதனால், சென்னை அணியின் வெற்றி வாய்ப்பு எளிது என்றே அனைவரும் கருதினர். அதற்கு ஏற்றாற்போல், கொல்கத்தா அணியில் பேட்டிங்கை தொடங்கிய நிதிஷ்ராணா 9 ரன்னிலும், சுப்மன் கில் டக் அவுட்டாகியும் வெளியறினர். அடுத்து வந்த ராகுல் திரிபாதி 8 ரன்களிலும், கேப்டன் மோர்கன் 7 ரன்களிலும், சுனில் நரேன் 4 ரன்களிலும் என 31 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது கொல்கத்தா. தீபக் சாஹர் மட்டும் இந்த 5 விக்கெட்டுகளில் 4 பேரை அவுட்டாக்கினர். கொல்கத்தாவின் நிலைமையை பார்த்தபோது சென்னை இன்று இமாலய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்றே தோன்றியது.
ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த ஆந்த்ரே ரஸல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஜோடி சென்னை அணிக்கு குடைச்சல் கொடுத்தது. குறிப்பாக, ஆந்த்ரே ரஸல் அடித்தால் சிக்ஸர் இல்லாவிட்டால் அவுட் என்ற பாணி ஆட்டத்தை கையில் எடுத்தார். அவர் 22 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்களை குவித்தார். சாம் கரணின் துல்லியமான பந்துவீச்சில் ரஸல் போல்டானார். அப்போது, கொல்கத்தா 112 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இருந்தது.
ரஸல் அவுட் ஆனதும்தான் சென்னை அணியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், அடுத்துதான் அவர்களின் மூச்சை நிறுத்தும் வீரரே களமிறங்கினார். ரஸல் அவுட்டானதும் மறுபுறம் தினேஷ் கார்த்திக்கும் அதிரடியை கையில் எடுத்தார். அவர் 24 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸருடன் 40 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், இங்கிடி பந்துவீச்சில் எல்.பி.டபுள்யூ ஆனார். ரஸல் அவுட்டான பிறகு களமிறங்கிய பாட் கமின்ஸ் சென்னை பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
கமின்ஸ் ஆட்டத்தை பார்த்தபோது, சென்னை அணி வீரர்களுக்கு நிச்சயம் கதி கலங்கியிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. 7வது விக்கெட்டாக 146 ரன்கள் இருந்தபோது தினேஷ் கார்த்திக் வெளியேறிய பின்னர், தனியாளாக போராடி 200 ரன்களை பாட் கமின்ஸ் கடக்க வைத்தார். தினேஷ் கார்த்திக்கு பிறகு களமிறங்கிய நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி டக் அவுட்டாகினார். ஆனால், கமின்ஸ் மட்டும் 34 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்ஸர்களுடன் 66 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
கடைசி 6 பந்தில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி வீரராக களமிறங்கிய பிரசித் கிருஷ்ணா ரன் அவுட்டாகியதால் ஆட்டத்தை கமின்சால் வெற்றிகரமாக முடிக்க இயலாமல் போனது. இதனால், விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா அணி 201 ரன்களை குவித்தது பிரமிக்கத்த வகையிலே இருந்தது. சென்னை அணியில் சாம் கரண் அதிகபட்சமாக 58 ரன்களை வாரி வழங்கினார். தீபக் சாஹர் மிகச்சிறப்பாக பந்துவீசி 29 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த போட்டி ஐ.பி.எல். வரலாற்றில் மறக்க முடியாத ஆட்டம் என்றால் அது மிகையாகாது. ஆட்டநாயகன் விருது டுப்ளிசிசுக்கு அளிக்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்றது.