Sri Lanka Cricket: இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட்..! ஐசிசி அதிரடி!
இலங்கை கிரிக்கெட் அணியை சஸ்பெண்ட் செய்ததாக ஐசிசி அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
![Sri Lanka Cricket: இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட்..! ஐசிசி அதிரடி! International Cricket Council (ICC) Board has suspended Sri Lanka Cricket’s membership of the ICC with immediate effect Sri Lanka Cricket: இலங்கை கிரிக்கெட் அணி சஸ்பெண்ட்..! ஐசிசி அதிரடி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/10/f8884034c1281ee95b2cd3db53c6c75d1699632044452739_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐசிசி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மிக மோசமாக விளையாடிய இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அந்த அணியில் ஹஸரங்கா மற்றும் சனக்கா போன்ற முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
இச்சூழலில், 9 லீக் போட்டிகளில் விளையாடி முடித்துள்ள இலங்கை அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மாறாக 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது.
அதேபோல், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இலங்கை அணி. அந்த போட்டியில், 302 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. முன்னாள் உலகக் சாம்பியனான இலங்கை அணி ஆப்கானிஸ்தான், வங்கதேச போன்ற அணிகளுடன் தோல்வி அடைந்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
வாரியத்தை கலைத்த இலங்கை:
இச்சூழலில், இலங்கை அணியின் தொடர் தோலிகளால் ஏமாற்றம் அடைந்த இலங்கை விளையாட்டுத் துறை தங்களுடைய கிரிக்கெட் வாரியத்தை கலைத்து உத்தரவிட்டது.
முதலில் இலங்கை அணியை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லாத நிர்வாகிகள் மட்டும் கலைக்கப்பட்ட நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான தோல்வியால் அந்நாட்டு வாரியமே மொத்தமாக கலைக்கப்படுவதாக அந்நாட்டு விளையாட்டு அமைச்சம் தெரிவித்தது.
அதற்கு இலங்கை வாரியத்தின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இலங்கை கிரிக்கெட் அணியை விரைவில் வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று உறுதியளித்தனர். இச்சூழலில், நீதிமன்றம் விளையாட்டு அமைச்சகத்தின் தடையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.
சஸ்பெண்ட் செய்த ஐசிசி:
இந்நிலையில், தான் இன்று (நவம்பர் 10) முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஒரு வாரியத்தின் செயல்பாடுகளில் அந்நாட்டின் அரசு அல்லது அரசியல்வாதிகள் அல்லது அரசாங்க நடவடிக்கைகள் தலையிடக்கூடாது என்பது ஐசிசியின் முக்கியமான விதிமுறையாகும். ஆனால் அதை இலங்கை அரசு மீறி இலங்கை வாரியத்தை கலைத்து தலையிட்டதால் இந்த தடை விதிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளது.
மேலும் ”இலங்கை அரசு தலையீடுகள் இல்லாமல் இலங்கை வாரியம் சுதந்திரமாக செயல்படும் வரை இந்த தடை நீடிக்கும்” என்றும் ஐசிசி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு தற்போது இலங்கை கிரிக்கெட் அணி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)