ind w Vs ire w; என்னா அடி... அயர்லாந்து அணியை சிதறடித்த இந்திய மகளிர் அணி... ஒருநாள் தொடரை கைப்பற்றியது
அயர்லாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி.
பந்தை தெறிக்கவிட்ட ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல்
ஏற்கனவே 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அயர்லாந்து அணியை இந்திய மகளிர் அணி வீழ்த்திய நிலையில், இன்று(15.01.25) ராஜ்கோட் மைதானத்தில் 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மளமளவென ரன்களை குவித்த இந்த ஜோடி, சதமும் விளாசியது.
ஸ்மிருதி மந்தனா அதிரடியாக 80 பந்துகளில் 135 ரன்களை குவித்து, பெண்கள் ஒருநாள் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவரின் அதிவேக சதம் என்ற சாதனையை படைத்தார். மறுபுறம், தனது இரண்டாவது தொடரில் விளையாடிய பிரதிகா ராவல் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த நிலையில், ரிச்சா கோஷ் 59 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்தபடியாக தேஜல் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் தீப்தி ஷர்மா 4 மற்றும் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 435 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. அதோடு, நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிற்கு பிறகு, மகளிர் ஒருநாள் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் எடுத்த 3-வது அணி என்ற சாதனையையும் படைத்தது.
அயர்லாந்தை சுருட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்
436 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய அயலாந்து வீராங்கனைகள், தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒருபுறம் நின்று ஆடிக்கொண்டிருந்த சாரா ஃபோர்ப்சும் 41 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு, பந்துவீச்சின்போது 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஓர்லா, பேட்டிங்கிலும் சற்று நின்று ஆடி 36 ரன்களை குவித்தார். எனினும், அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அயர்லாந்து அணி 31.4 ஓவர்களில் 131 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 304 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.
இந்திய தரப்பில் அதிகபட்சமாக, தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், தனுஜா கன்வர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியின் ஆட்ட நாயகியாக பிரதிகா தேர்வு செய்யப்பட்டார்.
தொடரை கைப்பற்றிய இந்திய அணி
இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, 3 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. தனது இரண்டாவது தொடரிலேயே சிறப்பாக ஆடிய இளம் வீராங்கனை பிரதிகா ராவல் தொடர் நாயகியாக அறிவிக்கப்பட்டார். அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான தொடரை முழுவதுமாக வென்ற இந்திய மகளிர் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: