மித்தாலி ராஜ் அரைசதம் வீண் - முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா-இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று பிரிஸ்டோல் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தானா(10) மற்றும் ஷெஃபாலி வர்மா(15) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் பூனம் ராவத் மற்றும் கேப்டன் மித்தாலி ராஜ் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பூனம் ராவத் 32 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஹர்மன்பிரீத் சிங் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். தீப்தி சர்மா (30), பூஜா(15) என கேப்டன் மித்தாலி ராஜுக்கு ஆதரவு தந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மித்தாலி ராஜ் 7 பவுண்டரிகளின் உதவியுடன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் எக்லெஸ்டோன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
202 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணியில் தொடக்க வீராங்கனை லாரா ஹில் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும் மற்றொரு தொடக்க வீராங்கனையான பியூமவுண்ட் இந்திய அணியின் பந்துவீச்சை பவுண்டரிகளாக சிதறடித்தார். கேப்டன் ஹீதர் நைட் மற்றும் பியூமவுண்ட் ஜோடி இரண்டாவது விக்கெட்டிற்கு 50 ரன்களுக்கு மேல் சேர்த்தது. அதன்பின்னர் கேப்டன் ஹீதர் நைட் 18 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
'ஷிகர் தவானும், ட்ராவிட்டும்'- ட்விட்டரை தெறிக்க விட்ட ரசிகர்கள் !
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்கிவர் பியூமவுண்ட் உடன் ஜோடி சேர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சை பதம் பார்த்தார். இருவரும் அரைசதம் கடந்தனர். அத்துடன் வேகமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக மூன்றாவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 119* ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்து மகளிர் அணி 34.5 ஓவர்களிலேயே வெற்றி இலக்கான 202 ரன்களை எட்டியது. கடைசி ஸ்கிவர் 74 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்சர் உடன் 74* ரன்களுடனும், பியூமவுண்ட் 87 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்சர் உடன் 87* ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி இந்திய மகளிர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா தரப்பில் ஜோசாமி மற்றும் ஏக்தா பிஸ்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தியிருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் டாவ்டன் பகுதியில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை சமன் செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க: 'டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குச்செல்லும் தமிழ் தாயின் மகன்' : யார் இந்த நீச்சல் வீரர் !