India Vs SL T20 | தொடரை கைப்பற்றுமா இந்தியா? இலங்கையுடன் இன்று இறுதி டி20 போட்டி..!
இலங்கை -இந்திய அணிகளுக்கு இடையே டி20 தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு கொழும்பில் நடைபெற உள்ளது.
இலங்கையுடனான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடுவதற்காக ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் ஷிகர்தவாண் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் போட்டித்தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-1 என்ற கணக்கில் வென்றுவிட்ட நிலையில், இலங்கை அணியுடனான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற வேண்டிய 2வது டி20 போட்டி இந்திய வீரர் குருணல் பாண்ட்யாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காரணத்தால் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்களை எடுத்தது. இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில், தொடரை கைப்பற்றப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணி வீரர் குருணல் பாண்ட்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவருடன் தொடர்பில் இருந்த 8 இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றபோதும் இந்திய அணிக்காக அவர்கள் களமிறங்கவில்லை.
இதனால், கடந்த போட்டியில் பேட்டிங்கில் ஷிகர்தவானும், பந்துவீச்சில் புவனேஷ்குமார், சாஹல் மட்டுமே அனுபவ வீரராக களமிறங்கினார். ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், சாம்சன், நிதிஷ்ராணா, சேத்தன் சக்காரியா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் என அறிமுக வீரர்களை கொண்டே இந்திய அணி களமிறங்கியது.
இலங்கை அணியைப் பொறுத்தவரை கடந்த போட்டியில் இறுதிவரை களத்தில் நின்று வெற்றி பெற வைத்த தனஞ்செய டி சில்வா நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடி வருகிறார். தொடக்க வீரர் மினோத்பானுகா கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், கடந்த போட்டியில் பெரும்பாலும் புதிய வீரர்களை கொண்டே களமிறங்கிய இந்திய அணி நிர்ணயித்த 132 ரன்களையே இலங்கை அணி 19.4 ஓவர்களில்தான் எட்டியது. இதனால், அந்த அணி இந்திய அணிக்கு எதிராக இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கடந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் ப்ரித்விஷா, இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணியில் இடம்பெறாதது மிகுந்த பின்னடைவாக அமைந்தது. குறிப்பாக, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சூர்யகுமார் யாதவ் இடம்பெறாதது அணி நல்ல ஸ்கோரை எட்ட முடியாமல் போனதற்கு முக்கிய காரணமாகும்.
இருப்பினும் அறிமுக வீரர்களாக கடந்த போட்டியில் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் ராணா, சேத்தன் சக்காரியா ஆகியோர் ஐ.பி.எல். போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள். கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை இவர்கள் வெளிப்படுத்தாவிட்டாலும், இந்த போட்டியில் ஆடும் லெவனில் இடம்பிடித்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்பப்படுகிறது.
இலங்கை அணி இந்தியாவிற்கு எதிராக விளையாடிய கடந்த 11 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 2021ம் ஆண்டு இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய டி20 போட்டியில் 3-0 என்ற கணக்கிலும், மேற்கிந்தீய தீவுகளுக்கு எதிராக ஆடிய போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் தோல்வியடைந்தனர்.
இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி லைவ், சோனி டென், சோனிடென் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.