India vs South Korea Hockey Highlights: செம மேட்ச்.. நடப்புச் சாம்பியன் சௌத் கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் கெத்தாக நுழைந்த இந்தியா..!
India vs South Korea Hockey Highlights: நடப்புச் சாம்பியன் சௌத் கொரியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் முதல் அணியாக இந்திய அணி நுழைந்துள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி கடந்த 3ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சௌத் கொரியா, சீனா, ஜப்பான் என மொத்தம் 6 அணிகள் களமிறங்கியுள்ளது. 2011ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் கடந்த ஆண்டு வரை மொத்தம் 6 சீசன்கள் நடைபெற்றுள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி:
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தனித்தனியே இரண்டு முறை கோப்பையையும், ஒருமுறை இணைந்தும் கோப்பையை வென்றுள்ளது. இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கணக்கில் தலா மூன்று கோப்பைகள் உள்ளது. இது இல்லாமல், கடந்த முறை அதாவது, 2021ஆம் ஆண்டு சௌத் கொரியா அணி கோப்பையை வென்றது. இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது. தொடரை தமிழ்நாடு மாநில அரசு நடத்துகிறது.
கடந்த 6 சீசன்களிலும் தொடரை நடத்திய நாடு கோப்பையை வென்றதாக வரலாறு இல்லை. அதனை இம்முறை பலமான இந்திய அணி முறியடிக்குமா என்பதை காத்திருந்திதான் பார்க்கவேண்டும். கடந்த 3ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டித் தொடர் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்தியா - சௌத் கொரியா
நடப்புத் தொடரில் தோல்வியே சந்திக்காத அணிகள் என்றால் அது இந்தியாவும் நடப்புச் சாம்பியனான சௌத் கொரியாவும் தான். இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மிகவும் கோலாகலமாக ராதாகிருஷ்ணன் மைதானத்தி; ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்கியது.
போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே இந்திய அணி கோல் அடித்து தனது கணக்கை கம்பீரமாக துவங்கியது. ஆனால் இந்திய அணி கோல் அடித்த அடுத்த சில நிமிடங்களில் சௌத் கொரியா அணி கோல் அடிக்க, முதல் சுற்றே சமனில் முடிந்து போட்டியில் எதிர்பார்ப்பு எகிறியது.
இரண்டாவது சுற்றில் இந்திய அணி மீண்டும் ஒரு கோல் அடிக்க, ஒட்டுமொத்தம் மைதானமும் துள்ளிக்குதித்தது. அதன் பின்னர் கோல் அடிக்க சௌத் கொரியா அணி எவ்வளவோ முயற்சி செய்தும் மூன்றாவது சுற்று முடியும் வரை அந்த அணியால் மேற்கொண்டு கோல் எதுவும் போடமுடியவில்லை. மூன்றாவது சுற்று துவங்கியது முதல் தனது ஆதிக்கத்தை செலுத்த, இதனால் தடுமாறிய கொரிய அணி கோட்டை விட்டது. இந்திய அணி தனது மூன்றாவது கோலை சிறப்பான கூட்டு முயற்சியினால் பெற்றது.
இறுதிச் சுற்று
இறுதிச் சுற்றில் இந்திய அணி தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்ததால், கொரிய அணி வீரர்கள் தாங்கள் கோல் அடிக்க வேண்டும் என்பதை விட இந்திய அணி வீரர்கள் கோல் அடிப்பதை தடுப்பதையே முழுமையாக செய்து வந்தனர். 4வது சுற்றின் கடைசி மூன்று நிமிடங்கள் இருக்கும்போது, ஜூகன் யாங் கொரிய அணிக்கான இரண்டாவது கோலை பதிவு செய்தார். . இதனால் போட்டியில் சுவாரஸ்யம் அதிகமானது. இறுதியில் இந்திய அணி கொரிய அணியை 3-2 என்ற கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த சீசனில் தோல்வியைச் சந்திக்காத அணி என்ற பெருமையுடன் உள்ளது.
அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி, மூன்றில் வெற்றி ஒரு போட்டியில் டிரா என மொத்தம் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது. இந்திய அணிக்கு இன்னும் ஒரு லீக் போட்டி மட்டும் உள்ளது. அதில் வரும் 9ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.