Ind vs Eng: டெஸ்ட் வரலாற்றில், பெஸ்ட் பவுலர்ஸை கொண்ட அணி இதுதான் - முன்னாள் வீரர் புகழாரம்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலே இதுவே தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் வரிசையை கொண்ட அணி என்று முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா புகழாரம் சூடியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் சூழலில் இருந்த நிலையில், ஆட்டத்தின் கடைசி நாளில் மழை பெய்த காரணத்தால் நாட்டிங்காமில் நடைபெற்ற அந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து, உலகப்புகழ் பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சாலும், ஷமி மற்றும் பும்ரா பேட்டிங்காலும் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் திரில்லிங்கான வெற்றியை பெற்றது.
லார்ட்சில் பெற்ற சரித்திரம் வாய்ந்த வெற்றிக்கு முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா,தனது சொந்த யூ டியூப் தொலைக்காட்சியில் வெளியிட்ட வீடியோவில் பேசியிருப்பதாவது, “இந்தியாவின் டெஸ்ட் அணியின் பந்து வீச்சு வரிசையிலே இந்த பந்துவீச்சு வரிசைதான் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை கொண்ட வரிசை ஆகும். அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஹர்பஜன்சிங்கும், அனில் கும்ப்ளேவும் இணைந்து ஆடியபோது, தலைசிறந்த இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தனர். ஆனால், நம்மிடம் நான்கு அல்லது ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இருந்தனர்.
ஜாகீர்கானுடன் இணைந்து சில சமயங்களில் அஜித் அகர்கர் வீசுவார். சில நேரங்களில் ஆஷிஷ் நெஹ்ரா அல்லது ஆர்.பி.சிங் சில தொடர்களுக்கு வீசுவார்கள். ஆனால், இதுபோன்று நான்கு அல்லது ஐந்து பந்துவீச்சாளர்கள் இணைந்தது இல்லை. தற்போது பும்ராவுடன், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், சர்துல் தாக்கூர் தற்போது வீசுகின்றனர். மேலும், சில வேகப்பந்து வீச்சாளர்கள் வெளியில் அமர்ந்துள்ளனர்.
இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களைப் பற்றி நாம் பேசும்போது, ரவிச்சந்திர அஸ்வின் ஹர்பஜன் சிங்கிற்கு தோளோடு தோள் கொடுத்து ஆடினார். ஜடேஜோ அனில் கும்ப்ளேவுடன் ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கியுள்ளார். ஆனால், வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், அனுபவத்தையும் பெற்றுள்ளனர். இந்தியாவிற்கு இதைவிட சிறந்த பந்து வீச்சு வரிசை கிரிக்கெட் வரலாற்றிலே அமைந்திருக்காது என்று நான் நினைக்கிறேன். ஆம். இதுதான் எப்போதும் சிறந்த வரிசை” என்று புகழாரம் சூடியுள்ளார்.
லார்ட்சில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் மொயின் அலி சேர்க்கப்பட்டு, இந்திய அணியில் அஸ்வினுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படாததற்கு பலரும் விமர்சனங்கள் தெரிவித்தனர். ஆனால், இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் இங்கிலாந்து அணியின் 20 விக்கெட்டுகளையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் ஆகியோர்தான் போட்டி போட்டு கைப்பற்றினர்.
முகமது சிராஜ் இரு இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.