(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs SL, 2nd ODI: அசத்திய கே.எல்.ராகுல்: இலங்கை அணியை அசால்ட்டாக வீழ்த்தி தொடரை வென்ற இந்திய அணி..
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை, 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் இலங்கை அணி ஏற்கனவே டி20 போட்டித் தொடரினை 2-1 என்ற கணக்கில் இழந்தது. நேற்று முன்தினம் நடந்த ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது முன்னிலை வகிப்பதால், இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற இந்திய அணி முன்னிலை காட்டி வருகிறது.
இலங்கை அணி பேட்டிங்:
இந்நிலையில், போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியில், அவிஷ்கா மற்றும் நுவனிடு ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே சிறப்பாகவும், துல்லியமாகவும் பந்துவீசி எதிர்தரப்பினரை மிரட்டினர். இதனால், அவிஷ்கா 20 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்கிய நுவனிடு 50 ரன்களை சேர்த்து அசத்தினர். தொடர்ந்து அவர் ரன் - அவுட் முறையில் எதிர்பராத விதமாக ஆட்டமிழந்தார்.
பந்துவீச்சில் மிரட்டல்:
தொடர்ந்து வந்த குசால் மெண்டீஸ் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 34 ரன்கள் சேர்க்க, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தசுன் ஷனகா வெறும் 2 ரன்களின் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி கட்டத்தில் துனித் ஓரளவிற்கு நிலைத்து நின்று 32 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால், 39.4 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 215 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இந்தியா தரப்பில், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும், அக்ச்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்திய அணி தடுமாற்றம்:
இதையடுத்து, இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், ரோகித், சுப்மன் கில், விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஆகியோர் அடுத்தடுத்து, விக்கெட்டுகளை இழந்தனர். இதனால், ஒருகட்டத்தில் 86 ரன்களை சேர்ப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
இந்திய அணி வெற்றி:
இதையடுத்து 5வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ராகுல் - பாண்ட்யா ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி 75 ரன்கள் சேர்த்தபோது, 36 ரன்கள் எடுத்திருந்த பாண்ட்யா அவுட்டானர். அவரை அடுத்து களமிறங்கிய அக்சர் படேல் 21 ரன்களை அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ராகுல் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதையடுத்து, 43.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 216 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் 62 ரன்களுடனும், குல்தீப் யாதவ் 10 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி, 2-0 என கைப்பற்றி அசத்தியது. ஏற்கனவே, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.